Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " வாழி நீடூழி வாழி "

 



நாம் மற்றவர்களை வாழ்த்தும்போது பல்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி வாழ்த்துகிறோம்.


பல்லாண்டு வாழ்க!  


வாழ்க வளமுடன்!


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!


எண்ணம்போல் வாழ்க!


என்றெல்லாம் சொல்லி  வாழ்த்துகிறோம்.


இவற்றையெல்லாம் விட சிறப்பான சொற்றொடர் ஒன்று தமிழில் இருக்கிறது.  

மேற்கண்ட சொற்றொடர்கள் எல்லாம் மற்றவர்களை  வாழ்த்துகின்ற சொற்றொடர்கள்  மட்டுமே.  ஆனால்,  இதுவோ வாழ்த்துபவரையும் சேர்த்து  வாழ வைக்கும் சொற்றொடர்.


" வாழி நீடூழி வாழி " 


இதைச் சொல்லி வாழ்த்தும்போது வாழ்த்து பெறுபவரும் வாழ்வார். வாழ்த்துபவரும் வாழ்வார். அதுவும் சாதாரணமாக அன்று. மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்று வாழ்வார். அத்தகைய பேறுபெற்ற சொற்றொடர்தான் " வாழி நீடூழி வாழி " என்ற சொற்றொடர்.


"வாழி " என்ற சொல்லுக்கு  வாழ்க என்பது பொருளாகும்.  

நீடூழி - நீடு + ஊழி 

நீடு என்ற சொல்லுக்கு  'நீண்ட' என்பது பொருளாகும்.  'ஊழி ' என்ற சொல்லுக்குக் 'காலம் ' என்பது பொருளாகும். 

"வாழ்க நீண்ட காலம் வாழ்க " என்ற பொருளையே " வாழி நீடூழி வாழி " என்ற சொற்றொடர் உணர்த்துகிறது. இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

பல சிறப்புகள் இருக்கிறது.


வள்ளல் பெருமானைப் பார்த்து,  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாழ்த்திய சொற்றொடர்தான் இது. ஆம். இது ஆண்டவனின் அமுத மொழி " ஆகும். தனக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் " மரணம் இல்லாப் பெருவாழ்வு  " கொடுத்த நிகழ்வை,   தான் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவலில் " பதிவு செய்துள்ளார் வள்ளல் பெருமான். 


" வாழிநீடூழி வாழியென்று ஓங்குபேர் 

ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி " 

( அருட்பெருஞ்ஜோதி அகவல் - 115)


" உலகம் உள்ளளவும்  இந்த மண்ணில் நீ  வாழ வேண்டும்" என்று சொல்லி அருட்கடலை எனக்கு வழங்கினார். அதாவது ' மரணம் இல்லாப் பெருவாழ்வை,  'அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ' எனக்கு  வழங்கினார்" என்கிறார் வள்ளல் பெருமான்.


வள்ளல் பெருமானுக்கு." அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் " மரணம் இல்லாப் பெருவாழ்வை வழங்கினார். நமக்கு யார் மரணம் இல்லாப் பெருவாழ்வை வழங்குவது? என்று நீங்கள் கேட்கலாம்.  " வாழி நீடூழி வாழி " என்ற சொற்றொடரிலேயே உலக மக்கள் அனைவர்க்கும் மரணம் இல்லாப் பெருவாழ்வை வழங்கிவிட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். 


" வாழி நீடூழி வாழி " என்ற சொற்றொடரைச் சொன்னாலே நமக்கு "மரணம் இல்லாப் பெருவாழ்வு "  உறுதி.   

ஆம்.  இந்தச் சொற்றொடரில் உள்ள சிறப்பே,  நம் தமிழ்மொழியின் சிறப்பெழுத்தான "ழ"கரம்தான். நாம்  ஒவ்வொரு முறையும் 

ழகரத்தை ஒலிக்கும் போதெல்லாம்,  நம் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. "வாழ்க வளமுடன் " என்ற சொற்றொடர் உருவாக்கப்பட்டதே அதற்காகத்தான். நாம் மற்றவர்களை வாழ்த்துகின்ற எல்லாச் சொற்றொடர்களிலுமே "ழகரம் " இருப்பதைக் காணலாம்.   வாழ்க என்ற சொல்லில் ஒரே ஒரு ழகரம்தான் வருகிறது. ஆனால், " வாழி நீடூழி வாழி " என்ற சொற்றொடரில் மூன்றுமுறை ழகரம் வருகிறது. இப்படி மூன்று முறை ழகரத்தை ஒலிக்கும்போது நம் வாழ்நாள் நீடித்துக் கொண்டே இருக்கும். இதுவே " வாழி நீடூழி வாழி என்ற சொற்றொடரின் சிறப்பாகும். 


இதையெல்லாம் அறிந்து, ஆராய்ந்துதான் , " தமிழ்மொழியே இறவாத நிலைதரும் " என்றார் நம் வள்ளல் பெருமான் . இங்கு "இறவாத நிலை " என்பது மரணம் இல்லாப் பெருவாழ்வையே குறிக்கிறது. "தமிழைப் பேசினாலே ஒருவனுக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு  கிடைத்துவிடும் " என்பதே வள்ளல் பெருமானின் கருத்தாகும். 


இனி நீங்கள் மற்றவர்களை வாழ்த்தும்போது " வாழி நீடூழி வாழி " என்றே வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கு வாழ்த்தொப்பம் இடும்போது " வாழி நீடூழி வாழி " என்று எழுதிவிட்டு வாழ்த்தொப்பம் இடுங்கள். மற்றவர்களுக்குப்  புத்தகம் பரிசளிக்கும்போது கூட " வாழி நீடூழி வாழி " என்று எழுதிவிட்டு கையொப்பம் இடுங்கள். " வாழி நீடூழி வாழி " என்று வாழ்த்துவதை  தமிழர்களின் அடையாளம் ஆக்குவோம். " வாழி நீடூழி வாழி " என்று சொல்லிச் சொல்லியே  நாம் அனைவரும் " மரணம் இல்லாப் பெருவாழ்வைப் " பெறுவோம்.  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்