தலைவன் பொருள் தேடச் சென்றுள்ளான். தலைவி தனித்திருக்கிறாள். அதனால், அவள் உள்ளம் தவிக்கிறது. உண்ணும் உணவையும் தவிர்க்கிறது. தலைவன் வருவதாகச் சொன்ன கார் பருவம் வந்ததேயன்றி, தலைவனுடைய தேர் வரவில்லை. அதை எண்ணி எண்ணி அவள் கண்களில் நீர் வந்தது. பிரிவால் வருந்தும் தலைவி, தன் தோழியிடம் மனவேதனைகளைச் சொல்லிப் புலம்புகிறாள்.
இந்தக் காட்சியை எவ்வளவு கவிநயத்தோடு கணிமேதாவியார் பாடியுள்ளார் என்பதை இப்பாடல்வழிக் காண்போம்.
" பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்று ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்கத் தண்டளவம் தாம்நகக்கண்டு ஆற்றா
மலையழுத சால மருண்டு. "
( திணைமாலை நூற்றைம்பது - 110)
தலைவன் உரிய காலத்தில் வராமையால், தலைவியின் கண்களிலோ ஆற்றாமையால் நீர் கொட்டுகிறது. தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளைக் காண்கிறாள்.
செம்முல்லை மொட்டுகள் இதழ் விரித்து நின்ற காட்சியோ, தன் ஆற்றாமையைப் பார்த்து அவை சிரிப்பதாக அவளுக்குத் தெரிகின்றது.
பக்கத்தில் இருக்கும் மலையிலிருந்து அருவிநீர் கொட்டுகின்ற காட்சியோ, தன் துயர் பொறுக்காமல், மழை நீரை கண்ணீராய்க் கொட்டி மலை அழுவதாகத் தெரிகின்றது.
தன் நிலைகண்டு அழுத மலையைப் பெரியோராகவும், சிரித்த முல்லையைச் சிறியோராகவும் பார்க்கிறாள்.
ஒருவர் இடருற்று துன்பப்படும் வேளையில் , அவர்மீது பரிவுகாட்டுவது பெரியவர்களின் நற்பண்பு ஆகும். பரிவு காட்ட வேண்டிய இடத்தில் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கும் சிறுமைக்குணம் கொண்டவர்கள் சிறியவர்கள் ஆவர்.
பெரியோரின் பெருமைக்குணம் என்றென்றும் போற்றத்தக்கதாகும்.
கவிநயத்தோடு, கற்பனை நயத்தையும் கலந்து இவ்வளவு அழகானப் பாடலைப் பாடிய கவிஞரின் புலமையும் போற்றத்தக்கதாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்