Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கீழடி "

 



" நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும் ,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், 

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் " 

( பட்டினப் பாலை : 185 - 188


கடல் ( பாய்மரக் கப்பல்) மூலமாகக் கொண்டு வரப்பட்ட வேகமாகச் செல்லக் கூடிய நிமிர்ந்த குதிரைகள் , சரக்கு வண்டிகளில் கொண்டு வரப்பட்ட கரிய மிளகு மூட்டைகளும் , வடமலையில் இருந்து வந்த மணிகளும், தங்கமும்,  மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும், அகிலும் " என்பதே இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில் கூறப்பட்டுள்ள பொருட்களில் குதிரையைத் தவிர மற்ற அனைத்துமே நம் நாட்டில் கிடைக்கின்றன. 


குதிரையோ , கடல் மூலமாகக் கொண்டு வரப்பட்டதாக , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட  பட்டினப் பாலையில் கூறப்பட்டிருக்கிறது.  இந்தச் செய்தி உண்மையா?

சங்க காலத்தில் குதிரை வளர்த்ததற்கான சான்றுகள் உள்ளனவா?

முதலில் சங்கம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளனவா?

சங்க இலக்கியங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள  நகரங்களும் , நகர அமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளனவா? 

சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26,350. இவ்வளவு அடிகளை எழுதுகின்ற அளவுக்கு தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்களா? அதற்கான சான்றுகள் உள்ளனவா?

சங்க காலம் ஒரு நகர நாகரிகமா?

சங்க கால மக்கள் எந்தச்  சமயத்தைப் பின்பற்றினார்கள்?

 சங்க கால மக்களின் வாழ்க்கை முறை  எப்படி இருந்தது? 


உண்மையிலேயே தமிழர்கள்தான்  உலகின் முதல் நாகரிகத்தை அமைத்தவர்களா? 

தமிழ்தான் உலகின் முதல் மொழியா?


இவை அனைத்திற்கும் என்ன சான்று? என்ன சான்று? என்று  தமிழர்களின் சங்கைப் பிடித்துக் கேட்டது இந்த உலகம்?  


அனைத்துக் வினாக்களுக்கும் விடை கிடைத்தது.

கீழடியில்.


உலகின் முதல் மாந்தன் தமிழனே என்பதற்கான சான்றாக இருந்த  குமரிக்கண்டம் நீரில் மூழ்கியதால் , அதையெல்லாம் சான்றாகக் கொள்ள முடியாது, அதைத் தோண்டி எடுக்கவும் முடியாது  என்று உலகம் புறந்தள்ளியது. நீரில் மூழ்கிய சான்றுகள் போனால் போகட்டும். நிலத்தில் மூழ்கிய சான்றுகள் இன்னும் அப்படியேதான்  இருக்கின்றன.  வாருங்கள் .  எங்கள் வரலாற்றை வந்து  பாருங்கள் என்று உலகில் உள்ள  அறிஞர் பெருமக்களை உள்ளன்போடு அழைக்கிறது கீழடி.


சங்க இலக்கியங்கள் ,  கல்வெட்டுகள் போன்றவற்றினை ஆராய்ந்த போது,  மதுரை மாநகரின் தென்கிழக்குப் பகுதியில் வைகையாற்றின் கரையோரத்தில் , ஒரு மாபெரும் நகரம் இருந்ததற்கானக் குறிப்புகள் கிடைத்தன. அந்தக் குறிப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வைகையாற்றுப் பகுதியில் உள்ள நிலங்களை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வந்தன. இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு வைகையாற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்ய முடிவெடுத்தது இந்தியத் தொல்லியல் துறை.


வைகை ஆற்றங்கரை யை ஒட்டியுள்ள பகுதிகளில்,  இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் திரு. கி. அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையிலான குழு,  முதல் கட்ட அகழ்வாய்வை 2015 ஆம் ஆண்டு  தொடங்கியது. மதுரை மாநகரில் இருந்து தென்திசையில் 15 கி.மீ,  தொலைவில்தான் கீழடி  அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் இருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தொலைவில்தான் வைகையாறு ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும்,  தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும், மேற்கில் கொந்தகையும் அமைந்திருக்கின்றன.  இந்த நான்கு ஊர்களைச் சுற்றியே அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.


கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான்  முதன்முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. ஒரு நகரமே மண்ணுக்குள் சிதைவுறாமல் உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு உலகம் வியப்பில் ஆழ்ந்தது. தமிழ் இலக்கியங்களைப் பனை மரங்கள் ( ஓலைச்சுவடிகள் மூலமாக ) பாதுகாத்ததைப் போல,  தமிழர் நாகரிகத்தைத் தென்னை மரங்கள் பாதுகாத்தன போலும். அகழ்வாய்வு  செய்வதற்கான நிலங்களை ஊர்மக்கள் மனமுவந்து கொடுத்தது அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றுகிறது. 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆண்டு வரை பத்துக் கட்டங்களாக அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு உண்மைகள் வெளியே வந்துள்ளன.


கீழடியில் மிகுதியான அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. கீழடி நகரம் ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு, இந்தச் செங்கவ் கட்டடங்களே வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை  என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. ஏறக்குறைய 15 உறை கிணறுகள் கண்டறியப் பட்டுள்ளன.  இது " உறைகிணற்றுப் புறச்சேரி " என்ற பட்டினப் பாலை தொடருக்குச் சான்றாக உள்ளது. அங்குள்ள உறை கிணறுகள்,  வடிகால் முறை போன்றவற்றைக் காணும் போது "கீழடி ஒரு நகர நாகரிகம் " என்பது உறுதியாகிறது. நீர்வழங்கலும் , கழிவுநீர் அகற்றலும் நகரத்தின் முதன்மைப் பணியாகும். கீழடியில் சுடுமண் குழாம் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன.


கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், கூரை ஓடுகள், செங்கற் சுவர்கள் , மண்பாண்டங்கள், மிளிர்கல், அணிகலன்கள், மணிகள்,  எழுத்தாணிகள் , முத்திரை கட்டைகள், இரும்பு, செம்பிலான போர்க்கருவிகள் , குத்துவாள்,  தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், தானிய கொள்கலன், முதுமக்கள் தாழி,  என 10,000 க்கும் மேற்பட்ட தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.


கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, பசு, ஆடு ஆகியவற்றினுடையவை. ஆகவே, கீழடியில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடுகளைப் போற்றிப் பாதுகாத்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்  ஆய்வாளர்கள்.  அதுபோலவே , குதிரை வளர்த்ததற்கானச் சான்றுகளும் கிடைத்துள்ளன. இதனால் பட்டினப் பாலை பாடல் கூறும் குதிரை பற்றிய  கருத்து உண்மையென்று உறுதியானது. 


தமிழி  எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும், முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இவற்றைக் "கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்புப்படி " ஆய்வு செய்ததில் இவற்றின் காலம் "திருவள்ளுவர் ஆண்டுக்கு முன் 6ஆம் நூற்றாண்டு" எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய காலத்தில் இருந்து 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது.  2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கீழடியில் வாழ்ந்தவர்கள்  எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்ற முடிவுக்குத் தொல்லியல் துறை வந்துள்ளது. 


பானையில் எழுதும் வழக்கம் எளிய மக்களிடம்தான் எப்போதும் இருக்கும்.  அரசர்கள், கற்றறிந்த புலவர்கள் ஓலைச்சுவடியில்தான் எழுதுவார்கள். அதனால் , கீழடி காலத்தில் எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம். கீழடியில் கிடைத்த எழுத்து வடிவமும், சிந்து சமவெளி எழுத்து வடிவமும் ஒன்று போலவே உள்ளன. இதனால் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள்,  தமிழர்களின் வழித்தோன்றல்கள்தான் என்பது உறுதியாகிறது. 


இத்தனைச் சான்றுகள் கிடைத்த கீழடியில்,  சமயம் சார்ந்த ஒரு சான்று கூட கிடைக்கவில்லை. தமிழர்களின் சமயம் எது?  என்று அரசியல் செய்பவர்களுக்கு சமயம் பார்த்து ஆப்பு வைத்தது கீழடி.  தமிழர்களுக்குச் சாதியும் இல்லை. சமயமும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டது கீழடி.


தமிழர்களின் வரலாறு  பற்றி மேலும் பல உண்மைகளை அறிந்து கொள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பத்து கட்ட அகழ்வாய்வுகள் போதாது. இன்னும் பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உண்மையான வரலாறு எதுவென்று இந்த உலகிற்குத் தெரியும். 


உலக வரலாற்றை  கிறித்து பிறப்புக்கு முன் ( கி.மு), கிறித்து பிறப்புக்குப் பின் ( கி.பி)  என்று பிரிப்பர். அதுபோல,  தமிழர்கள் வரலாற்றைக்  கீழடிக்கு முன் ( கீ.மு)  , கீழடிக்குப் பின் ( கீ.பி)  என்று பிரிக்க வேண்டும். கீழடிக்கு முன் உள்ள வரலாறு வந்தேறிகளால் உருவாக்கப்பட்ட வரலாறு.  அதில் துளி கூட உண்மையில்லை.  கீழடிக்குப்பின் நாம் எழுதுகின்ற வரலாறே தமிழர்களின் உண்மையான வரலாறு. அதில் துளி கூட பொய் இருக்காது.  அறிவியல் சான்றுகளுடன் உலகின் முதல் மாந்தன் தமிழனே. உலகின் முதல் மொழி தமிழே.  உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை இனிவரும் காலத்தில்  நடைபெற உள்ள  கீழடி ஆய்வுகள் அறிவிக்கும்  . வாய்மையே  வெல்லும்.  கீழடியில் கண்டறியப் போகும் தமிழர் வரலாறு அதைச்  சொல்லும். 


" கீழடி

என்றென்றும் தமிழர் வரலாற்றைச் சொல்லும்!   

உள்ளதை உள்ளபடி " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்