Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " ஓட்டைச் செவியும் உள "

 



ல்குன்றக் கோட்டம் என்ற ஏழிற்குன்றத்திற்கு ஔவையார்  சென்றார். அம்மலைக்கு உரிய மன்னனான நன்னனைச் சந்தித்துப் பாடல்கள் பல பாடினார். மன்னன் நன்னனோ பாரா முகத்தோடு இருந்தான். ஔவையின் பாட்டுக்குச் செவி சாய்க்கவில்லை. ஔவைக்கோ பரிசு கிடைக்கவில்லை. ஆனால் , தமிழுக்கோ ஔவையால் நல்ல பாடல் கிடைத்தது. அந்தப் பாடலை இங்குக் காண்போம்.


" இருள்தீர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே 

குருடேயும் அன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த 

பாட்டும் உரையும் பயிலா தனஇரண்டு 

ஓட்டைச் செவியும் உள."


( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 86)


இருளினும் சிறந்த நீலமணியின் ஒளிச் சிறப்பினைக் கொண்டு விளங்கும் ஏழில்குன்றத்துக்கு உரிய மன்னவனே!  எம்மை மதியாத உன் குற்றமானது உனக்குக்  கண்கள் இருந்தும் நீ  குருடாய் இருப்பதால் ஏற்பட்டது  மட்டுமன்று. குற்றமற்ற பாட்டினையும், உரையினையும்  கேட்டுப் பழகாமல் இருக்கும் இரண்டு ஓட்டைச் செவிகள் உனக்கு இருப்பதால் ஏற்பட்டதாகும். கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நீ இருப்பதால்தான் என் தமிழை உன்னால் உணர முடியவில்லை " என்று கூறுகிறார் ஔவையார்.


"தமிழ் அருமையைக் கேட்காத காதுகள் இருப்பதால் என்ன பயன்? அது இருந்தும் இல்லாமல் இருப்பதைப் போன்றது. அது ஓட்டைக் காது. அதனால் அது தமிழைக் கேட்காது " எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படி, எல்லோருக்கும் உரைக்கும்படி சொல்லியிருக்கிறார் ஔவையார்.


தமிழின் அருமைகளை நாள்தோறும் கேட்கும் காதுகளே,  உண்மையிலேயே கேட்கும் திறன்பெற்ற காதுகள்  ஆகும்.  தமிழின் அருமைகளைக் கேட்காத காதுகளோ ஓட்டைக் காதுகள். ஒன்றுக்கும் பயன்படாத காதுகள். 


இதில் ஒரு உண்மை என்னவென்றால், நம் தமிழ் மன்னர்கள் மிகவும்  குறும்புக்காரர்கள். ஔவையின் பாடலைக் கேட்டு உடனடியாகப் பரிசளித்தால் அதை அவர் பெற்றுக் கொண்டு வேறு நாட்டுக்குச் சென்று விடுவார். அதனால் ஔவையின் தமிழை நாள்தோறும் பருக முடியாது . அதற்காகவே  ஔவையார்க்கு  அவர்கள் உடனடியாக பரிசு தர  விரும்பவில்லை.  அதனால்தான் அவர்கள் பரிசில் தர காலம் தாழ்த்தினர். இது புரியாத நம் ஔவை பாட்டியோ சினம்கொண்டு பாடுவார். அப்பாடல்  தமிழுக்கு வளம் சேர்க்கும் பாடலாக அமைந்து விடும். 


" ஔவையின் சினம் கூட நம் தமிழுக்கு அழகுதான் " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்