Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " குண்டலகேசி "



காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பெரு வணிகருக்கு மகளாகப் பிறந்தவள்தான் பத்திரை. பத்திரை சிறு பிள்ளையாய் இருக்கும்போதே தன் தாயை இழந்துவிட்டாள். அவளுக்குத்  தாயை இழந்த வலி தெரியாமல் இருக்க அவளைச் செல்லமாக வளர்த்தார் அவள் தந்தை.  அவள்  கேட்டதை எதுவும் அவர் மறுத்தது கிடையாது.  


சோழ நாட்டில் காளன் ( சத்துவான்)  என்னும்  மிகப்பெரிய வழிப்பறித் திருடன் ஒருவன் இருந்தான்.  அவனைக் கைது செய்து சோழ மன்னர் முன் நிறுத்தினர் காவலர்கள்.  அவனைக் கழுவேற்றம் செய்து கொல்லுமாறு ஆணையிட்டார் மன்னர். காளனின் கைகளில் விலங்கு பூட்டி ஊர்த் தெரு வழியாக அவனை அழைத்துச் சென்றனர் காவலர்கள். 


இந்தச் சமயத்தில் தன் வீட்டின் மேல்மாடத்தில் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த பத்திரையின் பார்வை, தெரு வழியாக அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் கள்வன் மீது பட்டது.  அவனைப் பார்த்த மறுநொடியே பத்திரையின் அடி மனதில் அரியணை போட்டு அமர்ந்து கொண்டான் அந்தக் கள்வன் . களவு செய்வது அவன் தொழிலல்லவா . பத்திரையின் மனதையும் களவாடி விட்டான். தன் வாழ்க்கைக்கு இவனே ஏற்றத் துணை என்று எண்ணிக் கொண்டு, அந்த எண்ணத்தைத் தன் தந்தையிடம் சொன்னாள் பத்திரை.  


" பத்திரை! உனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது.  அவன் யாரென்று தெரியாதா? அவன் ஒரு வழிப்பறித் திருடன். அவன் வாழத் தகுதியற்றவன் என்று கருதிதானே மன்னர் அவனைக் கொல்ல சொல்லியிருக்கிறார்.அவனையா விரும்புகிறாய்?  அவனுடனா  வாழ விரும்புகிறாய்? வேண்டவே வேண்டாம்"  என்று அறிவுரை கூறினார் தந்தை  ஆனாலும் அவள் கேட்பதாக இல்லை . " வாழ்ந்தால் காளனோடுதான் வாழ்வேன். இல்லையேல் காலனிடம் ( எமன்) போவேன். நான் காளனோடு வாழ வேண்டுமா? இல்லை காலனோடு போக வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று மிரட்டினாள்  பத்திரை. 


வேறு வழியில்லாமல் தன் மகளை சோழ மன்னனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறினார் பத்திரையின் தந்தை. பத்திரையிடம் மன்னரும் எவ்வளவோ அறிவுரை கூறினார். ஆனாலும் அவள் கேட்கவில்லை. " மன்னா! ஒரு கள்வனைக் கொல்வதால் மட்டும்  குற்றங்கள்  குறைந்து விடாது.  அக்கள்வனைத் திருத்தி நல்வழிப் படுத்தினால்தான் குற்றங்கள் குறையும். அதை நான் செய்கிறேன். என் அன்பால் அவனைத் திருத்தி நல்வழிப் படுத்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்புக்  கொடுங்கள் " என்று கெஞ்சினாள். பத்திரையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய மன்னர்,   " திருடன்  திருந்தினால் நாட்டுக்கு  நல்லதுதானே " என்று எண்ணி  காளனை விடுதலை செய்தார் மன்னர். 


காளன் செய்த குற்றத்திற்கும், அவனால் பல்வேறு  இழப்புகளைச் சந்தித்தவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையாக வழங்க பொன்னையும் பொருளையும் வாரிக் கொடுத்துக் காளனை மீட்டு வந்தார் பத்திரையின் தந்தை. தன் மகளின் விருப்பப்படியே, காளனோடு திருமணமும்  செய்து வைத்தார். காளனை எப்படியாவது நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இல்லற வாழ்வைத் தொடங்கினாள் பத்திரை. 


" சுவை கண்ட பூனை சும்மா இருக்காது " என்பதற்கேற்ப, வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம்  தன் வழிப்பறித் தொழிலைச் செய்து வந்தான் காளன். இதைக் கண்டு அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறாள் பத்திரை . ஆனாலும் அவன் திருந்தவில்லை. " என்ன இருந்தாலும் நீ திருடன்தானே. உன் பழக்க வழக்கம் எப்படி போகும்.? என்று அவள் கூறியதும், பத்திரை மீது கடுஞ்சினம் கொண்டான். அவளைக் கொன்றுவிட்டு, அவள் சொத்துகளை முழுவதும் கைப்பற்றி, பழையபடி வழிப்பறி செய்யலாம். புதிய வாழ்க்கை வாழலாம் " என்று திட்டம் தீட்டினான். 


"கழுவேற்றத்திலிருந்து நான் தப்பி வந்தால்  என் குலதெய்வக் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொண்டேன். வா போகலாம்"  என்று பத்திரையை அழைத்தான். அவளும் அகமகிழ்ந்து புத்தாடை உடுத்திக்கொண்டு புதுப்புது நகைகளை அணிந்துகொண்டு அவனோடு புறப்பட்டாள். அவன் ஒரு மலையுச்சிக்கு அழைத்துச் சென்றான். அவள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றச் சொன்னான். அவளும் கழற்றிக் கொடுத்தாள். அதன்பின் அவளைப் பார்த்து,  "  நான் உன்னை மலையுச்சியில் இருந்து தள்ளிக்  கொல்லப் போகிறேன். நீ மலையுச்சியில் இருந்து கால் தவறி விழுந்து இறந்துலிட்டதாக ஊர் மக்களிடம் கதைலிடப் போகிறேன் " என்று சொல்லி  சத்தமாக சிரித்தான் காளன் . 


"ஏன் என்னைக் கொல்லப் போகிறாய்? " என்று கேட்டாள் பத்திரை. " நீ   என்னைத் திருடன் என்று சொல்லி ஏளனம் செய்தாய் அல்லவா? அதற்கு  உன்னைப் பழிதீர்க்கப் போகிறேன். வழிப்பறியே என் வாழ்க்கைநெறி. அந்த நெறியிலேயே இனி நான் வாழப் போகிறேன் " என்றான். " இவனை உயிரோடு விட்டால் இன்னும் பலரது வாழ்க்கையைக் கெடுத்துவிடுவான். நாம் செய்த தவறை  இவனைக் கொன்று சரி செய்துவிடலாம் " என்று எண்ணினாள் பத்திரை. " என் கடைசி விருப்பமாக உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களை மூன்று முறை சுற்றி வந்து  வணங்கியபின் என்னைக் கொன்று விடுங்கள் " என்று கூறினாள். அவனும் சரி என்றான். மூன்று முறை அவனைச் சுற்றி வந்தபின் , அவன் காலைத்தொட்டு வணங்குவதுபோல் நடித்துத் தன் முழு வலிமையையும் வெளிப்படுத்தி அவனைத் தள்ளி விட்டாள். அடுத்த நொடியே அவன் மலையுச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்தான். 


பின்னர் அந்த மலையுச்சியில் அமர்ந்து அழுதாள்.  " , இவன் ஒரு திருடன். இவன் எப்போதுமே திருந்தமாட்டான். இவன் உனக்கு வேண்டாம் " என்று எல்லோருமே சொன்னார்களே. நான் கேட்கவில்லையே . என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். இப்போது என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே. இனி நான் எப்படி ஊர் திரும்ப முடியும்?   யார் முகத்தில் விழிக்க முடியும்? என்று சொல்லி கால்போன திசையில் சென்றாள். கடைசியில் புத்தநெறி  துறவிகளைச் சந்தித்தாள். அவர்களிடம் மெய்யறிவு பெற்று இவளும் புத்த துறவியானாள். ஆம். பத்திரை "குண்டலகேசி" ஆனாள். புத்தநெறி துறவியானதும் தன் கூந்தலைப் பனை மட்டையால் மழித்துக் கொண்டாள். அதன்பின் அவள் முடி சுருள் சுருளாக வளரத் தொடங்கியது. அதன் பின்புதான் அவள் குண்டலகேசி ( சுருண்ட முடியை  உடையவள்)  என்று அழைக்கப் பெற்றாள். 

இதுதான் " குண்டலகேசி " காப்பியத்தின் கதை.


சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களை எல்லாம் பாடத்திட்டத்தில் வைத்தது போல,  இந்தக் கதையையும் முதலில் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் வளரிளம் பெண்கள் இக்கதையை முழுவதும் படிக்க வேண்டும். பெற்றோர் சொல்லையும், பெரியோர் சொல்லையும் கேட்காமல்,  தனக்கான வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேடிக் கொள்கிறோம் என்று சொல்லிக் கொண்டு  தங்களுக்கான வினையைத் தாங்களே தேடிக் கொள்ளும் பெண்களுக்கு இந்தக் கதை ஒரு மிகச் சிறந்த பாடமாகும். பெற்றோரைப் புறந்தள்ளிவிட்டு காளனைப் போன்ற காளைகளோடு இல்லற வாழ்வில்  சேர்ந்து குறுகிய காலத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்டு,  கடைசியில் நான் ஏமாந்து போய்விட்டேனே என்று பத்திரையைப் போல தலையில் அடித்துக் கொண்டு அழுகின்ற எத்தனையோ  பெண்களை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 


வாழ்க்கையைத் தேட வேண்டிய காலத்தில்,  வாழ்க்கைத் துணையைத் தேடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இக்கால இளம்பருவத்தினர் உணர்வதில்லை. " கணவனே கண்கண்ட தெய்வம் " என்பது பழமொழி. " கல்வியே கண்கண்ட தெய்வம் " என்பது புதுமொழி. கல்வியைத் தேடுங்கள். கால் இல்லாமல் கூட இப்போது நடக்க முடியும். கல்வி இல்லாமல் வாழ்க்கைப் பாதையில் ஒருபோதும் நடக்க முடியாது. கல்வி கற்கிற பருவத்தில் காதலைத் தேடி காலத்தை வீணாக்காதீர்கள்.  இன்று காலத்தை நீங்கள் வீணடித்தால்,  காலம் நாளை உங்களை வீணடித்துவிடும்.  குண்டலகேசியைப் போல.


உங்களுக்கென்று ஓர் வாழ்க்கையைத் தேடிய பின், உங்கள்  வாழ்க்கைத் துணையைக் கண்டறிய காதலிப்பது குற்றமல்ல. காதலுக்குச் சாதி தேவையில்லை. ஆனால், "சரிநிகர் நிலைப்பாடு "  தேவை. கல்வியில், வேலையில், பொருளாதாரத்தில் " சரிநிகர் " இருந்தால்தானே வாழ்க்கை இனிக்கும். நீங்கள் மருத்துவராய் பணிபுரியும் மருத்துவமனையில் உங்கள் மனைவியும் மருத்துவராய் இருந்தால் மகிழ்ச்சிதானே. ஒருவேளை அதே மருத்துவமனையில் கூட்டிப் பெருக்குகின்ற பெண் உங்கள் மனைவியாக அமைந்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள். நீங்கள் ஒரு மாவட்ட ஆட்சியராகவும், உங்கள் வாழ்க்கைத்துணை வேறு  ஒரு மாவட்டத்தின் ஆட்சியராகவும் இருந்தால், இந்த நாடே உங்களைப் போற்றுமல்லவா?


எந்தத் தொழிலையும் உயர்த்தியோ,  தாழ்த்தியோ நான் பேசவில்லை . கல்வியில் உச்சம் தொடுங்கள். உங்களைப் போல கல்வியில் உச்சம் தொட்டவரை வாழ்க்கைத் துணையாக்குங்கள். உங்கள் வாழ்க்கை புகழின் உச்சம் தொடுவதை நீங்கள் காண்பீர்கள். அழகான வாழ்க்கைத் துணையைத் தேடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் வாழ்க்கைத் துணையைத் தேடுங்கள்.


" இந்த உலகில் யாருமே 

காதலில் தோற்பது இல்லை!

காதலை ( ஆராயாமல்)  தேர்ந்தெடுப்பதில்தான் தோற்கிறார்கள்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்