Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " பண்பறிந்தோர் சால்பு "

  



செல்வந்தர் ஒருவர் தன் மகனை மிகவும் செல்லம் கொடுத்து  வளர்த்தார். அவனது மகிழ்ச்சிக்காக தன் செல்வங்களை எல்லாம் வாரி இறைத்தார். பொருட்செல்வத்தோடு வளர்ந்ததால் அவனிடம் அறிவுச் செல்வம் இல்லாமல் போனது.


நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்கள் அவன் மீது படையெடுத்தன. தீய பழக்க வழக்கங்களுக்கு அவன்  அடிமையாகி சீரழிந்து போவதைக் கண்டு வருத்தமுற்றார் அவன் தந்தை. எவ்வளவோ அறிவுரை சொல்லியும் தன் மகனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படாததைக் கண்டு  அந்தச் செல்வந்தர் கவலையுற்றார். 



ஒருநாள் அவனை அழைத்துக் கொண்டு ஓரு ஞானியிடம் சென்றார். அந்த ஞானியிடம் தன் மகனின் நிலையை விளக்கினார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்தார் அந்த ஞானி. 


அந்தச் செல்வந்தரை அங்கேயே அமர வைத்துவிட்டு அவர் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு தன் தோட்டத்துக்குச் சென்றார் ஞானி. அந்த செல்வந்தரின் மகனுடன் நீண்ட நேரம் நடந்து சென்றார். அவனுடன் எதுவும் பேசவில்லை. 


சிறிது நேரம் கழித்து அந்தத் தோட்டத்தில் உள்ள புற்களை எல்லாம் பிடுங்கச் சொன்னார். அவன் பிடுங்கினான். அதன்பின் அந்தத் தோட்டத்தில் இருந்த செடிகொடிகளைப் பிடுங்கச் சொன்னார் . அதையும் அவன் பிடுங்கினான். அங்கே இருந்த மரங்களைப் பிடுங்கச் சொன்னார் ஞானி.  அவன் எவ்வளவோ முயன்றும் அந்த மரங்களை அசைக்கக் கூட முடியவில்லை.  தன்னால் மரங்களைப் பிடுங்க முடியவில்லை என்றான் அந்தச்  செல்வந்தரின் மகன். 


அந்தச் செல்வந்தரின் மகனை அருகில் அழைத்த ஞானி, உன்னால் புற்களையும், செடிகொடிகளையும் பிடுங்க முடிந்தது. ஆனால்  மரங்களை உன்னால் அசைக்கக் கூட   முடியவில்லை. ஏன் தெரியுமா?  அளவில் சிறிதாக இருக்கும் போது எந்த ஒன்றையும் நாம் அகற்றி விடலாம். அதுவே அளவில் பெரிதாகி விட்டால் அதை அசைக்கக்கூட முடியாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. 


நம்மிடம் உள்ள தீய பழக்கங்களும் அப்படித்தான். அளவில் சிறிதாக இருக்கும்போதே அதை அகற்றிவிட வேண்டும். அதுவே அளவில் பெரிதாகிவிட்டால் அதை நம்மால் அழிக்க முடியாது. அது நம்மை அழித்துவிடும்.  அதனால் நம்மிடம் உள்ள தீய பழக்கங்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து அதை நீக்குவதே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியாகும் " என்றார் ஞானி.


தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான் செல்வந்தரின் மகன். " என்னிடம் உள்ள எல்லா தீய பழக்கங்களையும்  இந்த நொடிப்பொழுதிலேயே கைவிடுகிறேன்.  இனி என் வாழ்க்கையில் எந்தவித தீய பழக்கங்களுக்கும் நான்  ஆளாக மாட்டேன்"  என்று உறுதியளித்தான். "என்   அறிவுக்கண்ணைத் திறந்த தங்களுக்கு  என் வாழ்நாள் முழுவதும் நான்  நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் " என்று ஞானியிடம்  அந்தச் செல்வந்தரின் மகன். 


இந்த உலகம் சீரழிந்து போவதற்குக் காரணம் கெட்டவர்கள் அல்ல. தன்னைச் சுற்றி நடக்கின்ற குற்றங்களைத் தட்டிக் கேட்காமலும், தவறுகளைச் சுட்டிக் காட்டாமலும் , அனைத்தையும்  கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான் இந்த உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. அறிவில் சிறந்தோர்களும், சான்றோர்களும் தாங்கள் பெற்ற பட்டங்களாலும், விருதுகளாலும் உண்மையான பெருமையை அடைவதில்லை. இந்த கதையில் வரும் ஞானியைப் போல தங்கள் வாழ்நாளில்  எத்தனை மனிதர்களை நல்வழிப் படுத்துகிறார்களோ அதுதான் அவர்கள் பெறுகின்ற விலைமதிப்பற்ற விருதாகும். உண்மையான பெருமையாகும். 


இந்த உலகம் நல்ல நிலையை அடைய நாமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் எழவேண்டும். இந்த உலகம்  நெறிதவறிச் சென்றால் அதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்று எண்ணி வருந்த வேண்டும். இந்த உலக மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் பொறுப்பு சான்றோர்களிடமே உள்ளது. 


" கடல்முகந்து தீம்பெயலை ஊழ்க்கும் எழிலி 

மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம் 

படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு " 

( இன்னிலை - 09 ) 


மேகமானது,  உப்பு நீராக உள்ள கடல்நீரை முகந்து நன்னீராக்கி இனிய மழையாகப் பெய்து உலகத்தைக் காப்பதுபோல,   அறியாமையில் மயங்கிக் கிடப்போர் செய்யும் குற்றங்களை அகற்றி,  அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு உரிய முறையில்  உணர்த்தி, அவர்களை  மாட்சிமை உடையவர்களாக மாற்றி,  அவர்களையும் அவர்கள் மூலம் இந்த உலகத்தையும் காப்பது சான்றோர்களின் கடமையாகும். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்