Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " பாரதி நாடு "

 


1913 ஆம் ஆண்டு " கீதாஞ்சலி " என்ற நூலுக்காக இலக்கியத்திற்கான "நோபல் பரிசு " வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூருக்கு வழங்கப்பட்டது. இந்தச் செய்தியை அறிந்து சினம் கொண்டச் சிங்கமானார் பாரதியார். தன் நண்பர்களிடம் " கல்கத்தாவுக்குச் செல்ல வேண்டும். தொடர்வண்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு வாங்குங்கள். நான் உடனடியாக கல்கத்தா போக வேண்டும். தாகூருக்கு "நோபல் பரிசு " கொடுத்துள்ளார்கள். எதன் அடிப்படையில் கொடுத்தார்கள் என்பதை அறிய வேண்டும்.  அறிஞர் பெருமக்கள்  கூடிய அவையில் என் கவிதைகளையும் , தாகூரின் கவிதைகளையும் வைக்கட்டும். . கூடியுள்ள அறிஞர் பெருமக்கள் இருவரின் கவிதைகளையும் ஆராய்ந்து அறிவிக்கட்டும். பரிசுக்கு உரியவர் யாரென்று? தாகூரின் கவிதைகளை விட தகுதி வாய்ந்தது என் கவிதைகள் என்பதை அப்போது அவர்கள் அறிவிப்பார்கள். உண்மையில் பரிசுக்கு உரியவன் நான்தான் என்பதை இந்த உலகம் அறியும் "  என்றார் பாரதியார். 


சிறிது நேரம் கழித்து, " இந்தியர் ஒருவர் நோபல் பரிசு பெற்றதை எண்ணி நாம் எல்லோரும் பெருமை கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு தன் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார் பாரதியார். அதிகாரம் படைத்தவர்களின் பரிந்துரை இல்லாமல் இங்கு யாருக்கும் பரிசோ, விருதோ கிடைக்காது. அதற்கு பாரதி நல்ல எடுத்துக்காட்டு. பாரதி தன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை. தமிழிலேயே அனுப்பினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தால் மட்டுமே பரிசு வழங்கும் நடைமுறை அப்போது இருந்தது.  ஆங்கிலேய அரசினை எதிர்த்து குரல் கொடுத்ததால், ஆங்கிலேய அரசு இவர் கவிதையைப் பரிந்துரை செய்யவில்லை. இந்தக் காரணங்களால் பாரதிக்கு பரிசு கிட்டவில்லை . 


தாகூரோ தன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினார். அவர் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்ததால் ஆங்கிலேய அரசு அவருக்கு பக்க பலமாக இருந்து அவர் கவிதைகளைப் பரிந்துரை செய்தது. இதனால்தான்  தாகூர் "நோபல் பரிசு" வென்றார். " இந்த "அரசியல் சூழ்ச்சி "  இல்லாமல் போயிருந்தால் பாரதி " நோபல் பரிசு " வென்றிருப்பார். ஆசிய கண்டத்திலேயே " நோபல் பரிசு " பெற்ற முதல் மொழியாக நம் தமிழ்மொழி இருந்திருக்கும். பாரதிக்கு கவிதை துணை நின்றதே தவிர காலம் துணை நிற்கவில்லை. காலம் அவருக்கு எதிராகவே இருந்தது. அதனால்தான் தன் வாழ்நாள் முழுவதும் வறுமையைக் கண்டு வாழ்ந்தாரே தவிர  பெருமையைக் கண்டு வாழவில்லை. தாகூரைப் போல பரிசுகளோடும், விருதுகளோடும் அவர் வாழவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விழுதாகவே வாழ்ந்தார். 


நம் தேசத்தந்தை காந்தியடிகளுக்கு " மகாத்மா " என்ற பட்டத்தை வழங்கியவர் யார்? என்று கேட்டால் எல்லோரும் இரவீந்தரநாத் தாகூர் என்பார்கள். காந்தியும், தாகூரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டது 1915 ஆம் ஆண்டு. அப்போது தான் காந்தியின் எளிமையைக் கண்டு வியந்து " மகாத்மா " என்று அழைத்தார் தாகூர். ஆனால், 1910 ஆம் ஆண்டே காந்தியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க காந்தியைப் போற்றி ஒரு கவிதையை இயற்றினார் பாரதியார்.  அதில்தான் காந்தியை " மகாத்மா " என்று அழைத்தார்.


" வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் 

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் 

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை 

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க!

என்று பாடினார் பாரதியார். காந்தியடிகளுக்கு " மகாத்மா " பட்டம் கொடுத்ததோ பாரதியார். பெயர் வாங்கிக் கொண்டதோ தாகூர். 


இந்திய விடுதலைக்குப்பின் நாட்டுப்பண்ணாக எந்தப் பாடலை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்திலும்  விடுதலை உணர்வைத் தூண்டிய " வந்தே மாதரம் " பாடல் புறக்கணிக்கப்பட்டு தாகூரின் " ,ஜனகண மன " தேர்வானது. இந்தியாவின் பழமையான மொழி என்ற அடிப்படையில்  தமிழ் மொழியில் அல்லவா நாட்டுப்பண்  அமைந்திருக்க வேண்டும். வங்காளிகளின் செல்வாக்குக் காரணமாக போட்டி வங்கக் கவிஞர்களுக்கிடையே நடைபெற்றது. 


பாரதியார் இயற்றிய " பாரத சமுதாயம் வாழ்கவே " என்ற பாடலை எத்தனை தமிழர்கள் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் இந்தியாவின் நாட்டுப்பண்ணாக இருக்கக் கூடிய தகுதியைப் பெற்ற ஒரே பாடல் அதுதான். அந்தப் பாடலில் உள்ள சில வரிகளை மட்டும் பார்ப்போம்.


" இனியொரு விதி செய்வோம் - அதை 

எந்த நாளும் காப்போம் .

தனியொரு வனுக்கு உணவிலை யெனில் 

ஜகத்தினை அழித்திடுவோம் . 


எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் 

எல்லாரும் இந்திய மக்கள் , 

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் " 


இப்பாடலை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். வாய்ப்புக் கிடைத்தால் முழுப்பாடலையும் தேடிப் படித்துப் பாருங்கள். பாரதி  ஒரு "தேசியக்கவி " என்பது எவ்வளவு பெரிய உண்மையென்று புரியும்.


"தனியொருவனுக்கு உணவில்லை என்றாலே இந்த உலகத்தையே அழிப்பேன் " என்றான்  பாரதி. இன்று இந்தியாவில் இருபது கோடி மக்கள் ஒருவேளை உணவுடன் உயிர் வாழ்வதாக புள்ளிவிவரம் சொல்கிறது. 


"எல்லாரும் இந்திய மக்கள் , எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை "  என்றான் பாரதி.

" சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்" என்கிறது இந்திய அரசியலமைப்பு.

இங்கு சட்டம் அனைவருக்குமே சமம்தான். ஆனால் தீர்ப்புகள் மட்டும் அவரவர் வசதிக்கேற்ப வழங்கப்படும். 


" எல்லாரும் இந்நாட்டு மன்னர் " என்றான் பாரதி. மன்னராட்சியில் நிலம் மன்னர்களிடம் இருந்தது. மக்களாட்சியில் நிலம் மக்களிடம் தானே இருக்க வேண்டும். ஏன் அதிகாரம் படைத்தவர்களிடம் மட்டும் நிலம் குவிந்து கிடக்கிறது. "அனைவர்க்கும் சம நீதி " என்ற அரசியலமைப்பு ஏன் "அனைவர்க்கும் சம நிலம் " என்று சொல்லவில்லை. நீதியைப் பொதுவில் வைத்தவர்கள், நிலத்தை மட்டும் ஏன் பொதுவில் வைக்க வில்லை. ஓர் ஊரில் நூறுபேர்  வாழ்கிறார்கள். அந்த ஊரில் நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நூறு ஏக்கரையும் அந்த நூறுபேருக்கும் ஆளுக்கு ஒரு ஏக்கர் என்று வழங்க வேண்டும். அதற்குப் பெயர்தான் மக்களாட்சி, சமத்துவம். ஆனால் இங்கு 

சிலரிடம் பத்து, பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. சிலர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். இதை எப்படி மக்களாட்சி என்று சொல்ல முடியும்?


இந்தியா விடுதலை பெற்ற பின் மொத்த நிலத்தையும் அனைத்து மக்களுக்கும் சமமாக பகிர்ந்து கொடுத்த பின்பு அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.


இப்போது புரிந்ததா பாரதியின் பாடலை ஏன் நாட்டுப்பண்ணாக வைக்கவில்லை என்று?   . ஒருவனின் அரசியல்  பலமே அவன் கையில் வைத்திருக்கும் நிலம்தான். நாட்டில் பொதுவுடைமை மலர வேண்டும் என்று பாடிய பாரதியின் பாடலை நாட்டுப்பண்ணாக அறிவிக்காமல் போனதற்குக்

 காரணம் அரசியல் சூழ்ச்சியே. 


நோபல் பரிசும் வங்கத்திடம் சென்றது. நாட்டுப்பண்ணும் வங்கத்திடம் சென்றது. இறுதியாக சோழமண்டல ஏரியும் வங்காள விரிகுடாவாக வங்கத்திடம்  சென்றது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வங்கப்புலியிடம் சோழப்புலி தோற்றுவிட்டது. 


" வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு

வாழும் மனிதருக்கு எல்லாம் 

பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் 

பாரை உயர்த்திட வேண்டும் " 


என்று உலகம் வாழ பாடியவன் பாரதி.


" காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் 

கடலும் மலையும் எங்கள் கூட்டம் "


மனிதர்களையே மதிக்கத் தெரியாத இந்த உலகில் அஃறிணைகள் மீதும் அன்புகாட்டச் சொன்னான் பாரதி.


அப்படிப்பட்ட பாரதியை அவன் வாழ்ந்த போதுதான் கொண்டாடவில்லை. இந்த உலகம் வாழும் வரையாவது நாம்  கொண்டாட வேண்டாமா?  இந்த நாடு பாரதிக்குச் செய்த ஒரே சிறப்பு பாரதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியதுதான். உலக வரலாற்றில் ஒரு கவிஞனின் நூல்கள் முதன்முதலில்  நாட்டுடைமை ஆனது பாரதியின் நூல்களே. இந்தப் பெருமையைப் பாரதி பெற்றதுபோல் இன்னொரு பெருமையையும் பாரதி பெறவேண்டும். நம் நாட்டுக்குப் பாரதியின் பெயரைச் சூட்டுவதே அது. 


காந்தி நகர், இந்திரா நகர், அண்ணா நகர் என்று தலைவர்களின் பெயர்களில் நகர்களை உருவாக்கித் தலைவர்களைக் கொண்டாடிய நாம்,  ஒரு கவிஞனின் பெயரை நாட்டுக்குச் சூட்டி ஒரு கவிஞனை ஏன் கொண்டாடக் கூடாது. அறிவாளிகளைக் கொண்டாடுகிற சமூகம்தான் அறிவார்ந்த சமூகம். நாம் பாரதியைக் கொண்டாடி நாம் ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம். 


இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல் நிலைநாட்டப்பட்டுள்ளது. அந்தச் செங்கோலைப் பிடித்து தமிழன் ஆட்சி செய்கின்ற காலம் விரைவில் கனியும்.

அன்று " பாரத நாடு " 

" பாரதி நாடு " என பெயர்மாற்றம் பெறும். ஒரு கவிஞனின் பெயரை நாட்டுக்குச் சூட்டிய பெருமையில் நம்நாடு ஏற்றம் பெறும் . பாரதி பாடிய " பாரத சமுதாயம் வாழ்கவே " என்ற பாடல் நம் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். நாட்டில் பொதுவுடைமை ஆட்சி மலரும். இந்நாட்டு மக்கள் அனைவருமே "இந்நாட்டு மன்னர்" என அறிவிக்கப்படுவர்.


பாரதி நாட்டில்

"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் 

எல்லாரும் இந்நாட்டு மக்கள் 

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் " 

என்ற பாரதியின் பாடல்களைக் கொண்டு " புதிய அரசியலமைப்புச் சட்டம் " உருவாக்கப்படும்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்