Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கடையேழு வள்ளல்கள் "

 


" வள்ளல் " என்றால் தன்னை நாடி வருபவர்களுக்கு  வாரி வழங்குபவர் என்பது பொருளாகும். 

"கொடையாளி" என்றும் அழைக்கலாம். எத்தனையோ வள்ளல்களை நம் தமிழ்ச்சமூகம் கண்டுள்ளது. சங்க கால மன்னர்கள் எல்லோருமே வள்ளல்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அதில் பெருமை மிக்க வள்ளல்களாக வரலாற்றில் இடம்பெற்றவர்கள் " கடையேழு வள்ளல் " என்று சிறுபாணாற்றுப்படை சுட்டுகின்ற ஏழு வள்ளல்கள்தான். அந்த ஏழு வள்ளல்களுமே பெரும் நிலப்பரப்பை ஆண்ட பேரரசுகள் அல்ல. சிறிய நிலைப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்தான் . கொடை வள்ளல்கள் அனைவருமே குறுநில மன்னர்களாய் இருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். 


தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர்கள் யாருமே வள்ளல்களில் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. " பணம் இருப்பவனிடம்  குணம் இருக்காது. குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது " என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பது கடையேழு வள்ளல்களைக் கொண்டே முடிவு செய்யலாம். கொடுப்பதற்கு பணம் தேவையில்லை. மனம்தான் தேவை என்பதையே கடையேழு வள்ளல்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கடையேழு வள்ளல்களையும் அவர்களின் கொடைச் சிறப்பையும் சிறுபாணாற்றுப்படை  எடுத்துக் காட்டுகிறது.  சிறுபாணாற்றுப்படை  பாடல்கள் வழியாக கடையேழு வள்ளல்களை இங்குக் காண்போம்.


பேகன் 

வள்ளல் வையாவிக் கோப்பெரும் பேகன் பொதினி ( பழனி)  மலையை ஆட்சி செய்தவன்.


" வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்சைக்குக்  கலிங்கம் நல்கிய 

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 

பெருங்கல் நாடன் பேகனும் "


பேகன் வாழும் இடத்தில் பருவமழை தவறாது பெய்யும். அதனால் வன்மை மிகுந்த மலைப்பக்கத்துக் காட்டில் மயில்கள் சுற்றிக் கொண்டுத் திரியும். அந்த மயில் மழைக் காலத்தில் குளிரால் வாடியது. மயில் வாடியதைக் கண்டு பேகனின் மனம் வாடியது. அதனால் தான் போர்த்தியிருந்த விலைமதிப்பற்றப் போர்வையைக் கொண்டு மயிலுக்குப் போர்த்தியவன். ஆவியர் ( ஆயர்) குடியில் பிறந்த பெருந்தகை மிக்க மலைநாட்டு மன்னனாக விளங்கியவன்.


பாரி 

வள்ளல் வேள்பாரி பறம்பு மலையை  ( பிரான்மலை ) ஆட்சி செய்தவன்.  


நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் 

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய 

பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் 

பறம்பின் கோமான் பாரியும் "


பலரும் உண்ணும்படியாக தேனை வழங்கக் கூடியது சுரபுன்னை. அம்மரங்கள் மிக்க நெடிய வழியின் கண்ணே செல்லும்போது தன்னுடைய தேரினைத் தடுத்து நின்ற முல்லைக்கொடி , தன் தேரை விரும்பியதாகக் கருதி தன்னுடைய மிகப்பெரிய தேரினையே முல்லைக் கொடிக்கு அளித்தவன் . அருவிகள் அளப்பறிந்து துள்ளும் பறம்பு மலைக்கு  அரசனாக விளங்கியவன் பாரி என்னும் வள்ளல். 


காரி 

வள்ளல் மலையமான் திருமுடிக்காரி . மலாடு (  திருக்கோவிலூர் ) என்னும் நாட்டை ஆட்சி செய்தவன். 


"வாள்உளைப் புரவியொடு வையகம் மருள 

ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த 

அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் 

கழல்தொடித் தடக்கை  காரியும் "


மணிகளையும், தலையாட்டத்தையும் கொண்டது குதிரை. அத்தகைய குதிரையுடன் தன் நாட்டையும் , இனிய சொற்களையும் இரவலர்கள் கேட்ட போதெல்லாம் கொடுத்தவன். கையில் வேலையும்,  கொடியினையும் கொண்டவன் காரி என்னும் வள்ளல்.


ஆய் அண்டிரன் 

வள்ளல் ஆய் அண்டிரன் பொதிகை மலையை ஆட்சி செய்தவன்.


" நீல நாகம் நல்கிய கலிங்கம் 

ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் 

ஆர்வ நன்மொழி ஆயும் " 


ஒளிமிகுந்த நீலமணியினையும் , நாகங்கள் கொடுத்த கலிங்கத்தையும்,  ஆல மரத்தின் அடியில் இருந்த இறைவனுக்கு விருப்பத்துடன் கொடுத்தவனும் , வில்லேந்திய சந்தனம் பூசப்பட்ட அழகிய தோள்களை கொண்டவனும்,  ஆர்வம் மிகுந்த மொழிகளைப் பேசக் கூடியவனுமாக இருப்பவன்தான் ஆய்  என்னும் வள்ளல். 


அதியமான் 

வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூர் ( தருமபுரி)  நாட்டை ஆட்சி செய்தவன்.


" கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி 

அமிழ்துவிளை தீம்கனி ஔவைக்கு ஈந்த 

உரவுச் சினம்கனலும் ஒளிதிகழ் நெடுவேல் 

அரவக்கடல் தானை அதிகனும் "


மிகப்பெரிய மலையின் சாரலில் கிடைத்த நெல்லிக்கனி,  அமிழ்தம் போன்று விளங்கி தன் ஆயுளை நீட்டிக்கும் என அறிந்திருந்தும் அதை தான் உண்ணாமல் ஔவை பிராட்டிக்கு கொடுத்தவனும்,  கொற்றவையின் சினத்தைப் போன்ற ஒளியையும்,  கடலைப் போன்ற ஓசை கொண்ட படையையும் கொண்டவன் அதியமான் என்னும் வள்ளல்.


நள்ளி 

வள்ளல் நள்ளி கண்டீர மலை ( நீலகிரி)  என்னும் நாட்டை ஆட்சி செய்தவன்.


" நட்டோர் உவப்ப நடைப்பரி காரம் 

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை 

துளிமழை பொழியும் வளிதுஞ்சு  நெடுங்கோட்டு 

நளிமலை நாடன் நள்ளியும் " 


தன் மனதில் உள்ளதை மறைக்காமல் மற்றவர்களிடம் கூறக்கூடியவன். தன்னை நாடி வந்தவர்கள் மனமகிழ வேண்டும் என்று செயல்படக் கூடியவன். இரவலர்கள் இல்லறம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களைக் குறிப்பறிந்து மற்றவர்களுக்கு வழங்கியவன். மழை வளமிக்க நெடிய கோடுகளையுடைய மலை காட்டை உடையவனும், போர் செய்வதில் வல்லமை மிக்கவனும் , போர்த் தொழிலில் சிறந்தவனுமான நள்ளி என்னும் வள்ளல்.


ஓரி 

வள்ளல் வல்வில் ஓரி கொல்லி மலை என்னும் நாட்டை ஆட்சி செய்தவன்.


"நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து 

குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த 

காரிக் குதிரை காரியொடு மலைந்த 

ஓரிக் குதிரை ஓரியும் "


செறிவு மிக்க கொம்புகளில் நறுமணம் கமழும் பூக்கள் மிக்க சுரபுன்னை  மரங்களையும் , குறும்பொறைகளைக் கொண்ட நல்ல நாடுகளையும் கூத்தர்களுக்கும் , யாழ் மீட்டும் பாணர்களுக்கும் பரிசாக  வழங்கியவன். ஓரி என்னும் குதிரையை உடைய ஓரியும் , காரி என்னும் குதிரையை உடைய காரியும்  போர் புரிந்தனர்.  இதில் ஓரி வென்றான். அத்தகைய சிறப்பு வாய்ந்தவன் ஓரி என்னும் வள்ளல்.


கடையேழு வள்ளல்கள் அனைவருமே  கொடைத்தன்மையும் , பெருந்தன்மையும் கொண்டவர்களாக விளங்கியதைச் சிறுபாணாற்றுப்படை  இவ்வாறு  விளக்குகிறது. 



" கொடுப்பதற்குக் 

கோடிப்பணம் 

தேவையில்லை!

ஒரு கொய்யாப்பழம் போதும்!

கொடுப்பதற்கு  மனம்தான் தேவை!

கோடிகள் தேவையில்லை!  

எல்லோருமே 

வள்ளல்களாய் வாழலாம்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்