Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தமிழுக்குத் தலைகொடுத்தான் குமண வள்ளல்"

 

 



எத்தனையோ வள்ளல்களைத் தமிழுலகம் கண்டுள்ளது. எல்லோரும் பொன்னையும், பொருளையும் வாரி  கொடுத்தார்கள். தன் தலையையே தமிழுக்குக் கொடுத்து  வள்ளல்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டான் குமண வள்ளல்.


முதிரமலை என்னும் மலைநாட்டைக் குமணன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். முதிரமலை தற்போது முதுமலை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. வறியவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகிய குமணன் , தன்னை நாடி வரும் புலவர்களின் தகுதி அறிந்து பொன்னும் பொருளும் வாரி வழங்குவான். அணியும் மணியும் அள்ளிக் கொடுப்பான். யானைகளையும் குதிரைகளையும் கணக்கின்றிக் கொடுப்பான். பிறர்க்குக் கொடுத்து அவர்களுடைய இன்முகம் இன்புறுவதைக் கண்டு தானும் இன்புறுவான். இவனது புகழ் உலகெங்கும் பரவியது. வறியோர்களும், புலவர்களும் இவனை நாடி வந்து கொண்டே இருந்தனர். 


குமண வள்ளலுக்கு இளங்குமணன் என்றொரு தம்பி இருந்தான். கூடாநட்புடன் கூடியிருந்தான். " இருக்கின்ற செல்வங்களை எல்லாம் வறியோர்க்கு வாரி கொடுத்து  உன் அண்ணன் இன்று வள்ளல் ஆகிவிட்டான். நாளை வரலாறு ஆகிவிடுவான். நீ மட்டும் வறியோன் ஆகப் போகிறாய். உன் பங்கையும்  சேர்த்து அவன் கொடுத்துக் கொண்டு இருக்கிறான். அவனைக் கொன்றுவிட்டு நீ அரசனாகி விடு. அப்போதுதான் நீ இன்பமாக வாழ முடியும் " என்று நயமாகப் பேசி இளங்குமணன் நெஞ்சில் நஞ்சை விதைத்தனர் இளங்குமணனின் நண்பர்கள்.


ஆழமாக சிந்தித்துப் பார்த்த இளங்குமணன் தன் அண்ணனைக் கொல்வதென்று முடிவு செய்தான். தன் தம்பி தனக்கு வஞ்சக வலை விரித்துள்ளதை அறிந்து வருத்தமுற்றான் குமணன். செல்வத்தை எதிர்பார்ப்பவனிடம் நல்ல சிந்தனையை எதிர்பார்க்க முடியாது. அதனால் தம்பியைத்  திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தான்." நல்லவர்க்கு அழகு சொல்லாமல் கொள்ளாமல் போவதுதானே " . அதனால் யாரிடமும் சொல்லாமல் தன் நாட்டை விட்டு வெளியேறினான். முதிரமலைக் காட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான் குமணன்.


குமணன் நாட்டை விட்டு வெளியேறியதும் இளங்குமணன் மன்னன் ஆனான். மக்களுக்கோ மாபெரும் எதிரி ஆனான். ஆம் மக்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் குமணனையே போற்றினர். இளங்குமணனைத் தூற்றினர். மக்கள் எதிர்ப்பு அதிகமாக அதிகமாக இளங்குமணனுக்குப் பயம் வந்துவிட்டது. ஒருவேளை அண்ணன் மீண்டும் வந்துவிட்டால் மக்கள் நம்மை கொன்று விடுவார்கள். அதற்கு முன் அண்ணனைக் கொன்றுவிட வேண்டும் என்று எண்ணினான். " "குமணனின் தலையைக் கொண்டு வருபவர்களுக்குக் கோடி பொன் பரிசாக  வழங்கப்படும் " என்று அறிவித்தான் இளங்குமணன். யாருமே தலையைக் கொண்டு வரவில்லை. இனி இந்நாட்டில் இருந்தால் நம் தலை தப்பாது என்று எண்ணி பக்கத்து நாடுகளுக்குத் தலைதெறிக்க ஓடினார்கள். 


இந்தச் சூழலில் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் குமணன் இருப்பிடம் தேடி முதிரமலை காட்டுக்குள் செல்கிறார். குமணனைக் காண்கிறார். அரியணையில் அமர வேண்டியவன் யாரும் அறியாத இடத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டு கண் கலங்குகிறார். குமணனின் பெருமையைப் பாடுகிறார். தன் குடும்பத்தின் வறுமையையும் பாடுகிறார். 


புலவரின் நிலையை எண்ணி வருந்துவதா?  அவருக்கு பரிசு கொடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்நுவதா? என்று கவலையுற்றான் குமணன். தமிழைக் காக்கும் புலவனைத் தன்னால் காக்க முடியவில்லையே என்று ஏங்கினான். தன் உடைவாளை எடுத்தான். புலவர் கையில் கொடுத்தான். " என் தலையைக் கொண்டு வந்து தருவோர்க்குக் கோடி பொன் தருவேன் என்று அறிவித்திருக்கிறான்என் தம்பி. ஆகையால், இந்த வாளால்  என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். ஒரு தமிழ்ப்புலவனின் வறுமையைப் போக்க, தாய்த்தமிழைக் காக்க என்னுடைய தலை என்ன தவம் செய்ததோ " என்று பெருமைபொங்கக் கூறினான் குமணன்.


" தமிழுக்காக தன் தலையையே கொடுக்க வந்த வள்ளலே, எமக்கு உம் தலை வேண்டாம். உம் உடைவாள் போதும். இந்த வாளால் வெட்ட வேண்டியது உம் தலையை அன்று. உம் தம்பியின் வாலை " என்று சொல்லிவிட்டு விடைபெற்று சென்றார்  பெருந்தலைச் சாத்தனார். போகிற வழியில் ஒரு வாழைமரத்தின் அடித்தண்டை வெட்டியெடுத்து குமணன் தலைபோல் செய்து தன் பையில் போட்டுக் கொண்டு போனார் புலவர். இளங்குமணனைச் சந்தித்தார். தன் எதிரே நின்ற புலவரின் ஒரு கையில் தன் அண்ணனின் உடைவாளையும், மறு கையில் தலையையும் கண்ட இளங்குமணின் இதயத்தில் இடி விழுந்தது. கண்கள் கண்ணீர் மழை பொழிந்தது. " அன்று அறிவை இழந்தேன். இன்று அண்ணனை இழந்தேன். நான் ஒரு பாவி. நான் வாழத் தகுதியற்றவன் " என்று சொல்லி கதறி அழுதான். தன் தவறை உணர்ந்து வருந்திய, திருந்திய இளங்குமணனிடம் " உன் அண்ணன் உயிரோடுதான் இருக்கிறார் " என்று சொல்லி நடந்த உண்மையைக் கூறினார் புலவர் 


" மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் 

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே ; 

துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர், 

இன்மையின் இரப்போர்க்கு  ஈஇ யாமையின்,

தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே ; 

தாள்தாழ் படுமணி இரட்டும், பூநுதல்  ,

ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் 

கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் 

பாடி நின்றெனன் ஆகக், கொன்னே 

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்

நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன 

வாள்தந் தனனே , தலைஎனக்கு ஈயத் 

தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின் ,

ஆடுமலி உவகையோடு வருவல், 

ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே " 

( புறநானூறு - 165)


" நிலையில்லாத இவ்வுலகில் நிலைபெற  நினைத்தவர்கள் தம் புகழை நிலைநாட்டினர். அப்படி செய்யாமல் செல்வம் படைத்தவர்களில் பலர் வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் கொடுக்காமல் முற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக  உள்ளனர். அணிகலன் பூட்டிய  யானைகளை , பாடி வருபவர்களுக்குக் குறையாது கொடுக்கும் அழிவில்லாதப் புகழையும் ,  வலிய குதிரைகளையும் உடைய தலைவனாகிய குமணனைப் பாடி நின்றேன். 

பெருமை பெற்ற பரிசிலர் பரிசு பெறாமல் செல்லுதல்,  தான் நாடு இழந்து நிற்பதைவிட மிகவும் கொடுமையானது என்று எண்ணி தன் தலையையே எனக்குப் பரிசாக அளிப்பதற்காக என்னிடம் வாளைக் கொடுத்தான். தன்னிடம் தன்னைவிடச் சிறந்த பொருள் யாதும் இல்லாமையால் அவன் அவ்வாறு செய்தான். எனவே வாளைப் பெற்றுக் கொண்டு  வெற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உன்னிடம் வந்தேன். இதோ அந்த வாள். நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார் பெருந்தலைச் சாத்தனார். 


"இந்த நாடு முழுவதையும் பரிசாகக் கொடுக்கிறேன். என் அண்ணன் இருக்கும் இடத்தைக் காட்டுங்கள். இந்த வாளால் என் தலையை வெட்டுங்கள். அந்த தலையை என் அண்ணனின் காலடியில் போடுங்கள் " என்று கெஞ்சினான் இளங்குமணன்.

தனக்குக் கிடைக்கும் பரிசை விட அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையே பெரிதென நினைத்தார் புலவர். காட்டில் குமணன் இருக்கும் இடத்திற்கு  அவனை  அழைத்துச் சென்றார்.


அண்ணனைக் கண்டதும்  தன் தவறுக்கு மனம் வருந்தி,  காலில் விழுந்து அழுதான். மீண்டும் அரியணையில் அமர வேண்டினான் இளங்குமணன்.  முத்தமிழுக்குத் தலைகொடுத்த குமண வள்ளல் முதிரமலை நாட்டின் மன்னனாக மீண்டும் முடிசூட்டினான். தமிழுக்குத் தலைகொடுத்தான் குமணன். அவன் தலைக்கு மணிமுடி கொடுத்து அழகு பார்த்தது அன்னைத் தமிழ்!


" தமிழா!

குமணன்போல் தமிழுக்குத் தலைகொடுக்க வேண்டாம்!

உன் தலைமுறையைக் கொடு!

தமிழும் வாழும்.

தமிழால் நீயும் வாழ்வாய்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்