Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்!பல்லுயிர் ஓம்புதல்

 



" பல்லுயிர் ஓம்புதல் "


,பொருள்தேடச் சென்ற தலைவன் தன் பணி முடிந்ததும் தலைவியைக் காண பெரும் ஆவலுடன் திரும்புகிறான் . அவன் வரும்வழியில் பூஞ்சோலை இருக்கிறது. அங்கே யாழின் இசையைப்போல் இனிமையாகச் சத்தமிட்டப்படி வண்டுகள் காதல் செய்யும். அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் தன் தேரை நிறுத்துகிறான் தலைவன். தன்னுடைய தேரின் மணிச்சத்தத்தைக் கேட்டு  அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி தேர்  மணிகள் சத்தமும்  , குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகள் சத்தமும் எழாதபடி மணிகளின் நாக்குகளை இழுத்துக்கட்டுகிறான்.  


காரணம் என்ன தெரியுமா?  வண்டுகள் தம் துணையுடன கூடி மகிழும்போது மணிகளின் ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்து வண்டுகளின் காதலைப் பிரித்து விடக் கூடாது என்பதே அவன் நோக்கம். தம்மைப் போல வண்டுகள் பிரிவுத்துயர் அடைய வேண்டாம் என்று எண்ணி வண்டுகளின் காதலுக்கு இடையூறு செய்ய நினையாதவன்  நின் தலைவன் என்று தலைவிக்கு தோழி உணர்த்தும் அகநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.


" பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 

தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி 

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் " 

( அகநானூறு - 04)


வாயில்லா உயினங்களுக்கு மட்டும் அல்ல , வண்டுகளுக்குக் கூட தீங்கு நினைக்காத ஒரே இனம் நம் தமிழினம் . 

இன்று கிளியை கூண்டுக்குள் அடைத்து வைத்து சோதிடம் சொல்வது , குரங்கை வைத்து வித்தைக் காட்டுவது , யானையை  பிச்சை எடுக்க  வைப்பது , குதிரையை வைத்துப் பந்தயம் நடத்தி பணம் பார்ப்பது , விலங்குகளை வைத்து வட்டரங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என பல்வேறு வகைகளில் விலங்களை வைத்து பிழைப்பு நடத்தும் மனித இனம்தான் இந்த உலகில் உள்ள மட்டமான உயிரினம் ஆகும்.


" இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க் 

கரும்பார் கழனியுள் சேர்வர் - கரும்பார்க்கும் 

காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.


( நாலடியார் - 122) 


வண்டுகள் ஒலிக்கின்ற வனத்திலே பொருந்தி  வாழ்கின்ற கௌதாரி, காடை முதலான பறவைகளைக் கூட்டினுள்ளே இருக்கும்படி கொண்டுபோய் வைத்து வளர்ப்பவர்கள் , மறுபிறப்பில் பகைவர்களிடம் அடிமைகளாகி ,  இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு கரும்புக் கொல்லையிலும், விளை நிலத்திலும் வேலை வாங்கப்படுவர் என்கிறது இப்பாடல்.  போன பிறவியில் யாருக்கு என்ன பாவம் செய்தேனோ இந்தப் பிறவியில் இவ்வளவு  கொடுமைகளை அனுபவிக்கிறேனே  என்பவர்கள் எல்லோரும்  இப்பாடலைப் பலமுறை படித்துப் பார்த்து மன அமைதி பெறவும்.  


வீடுதோறும் செடி வளர்த்திடுங்கள். மரம் வளர்த்திடுங்கள். விலங்குகள் ( நாய்,  பூனை), பறவைகள், மீன்கள் ( மீன் தொட்டிகளில்)  வளர்க்காதீர்கள் . அதன்அதன் வாழிடத்தில்  அந்தந்த உயிரினங்கள் வாழ வேண்டும்.  அதுதான் இயற்கையின் கோட்பாடு. உயிரியல் பூங்காவில்  விலங்குகளையும் , பறவைகளைக் கூண்டுக்குள்ளும் வளர்ப்பது மனிதத் தன்மையற்ற செயல். இன்று வீடுதோறும் நாய், பூனை, பறவை, மீன் வளர்ப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய பாவச்செயலாகும்.


நாய், பூனை, பறவை, மீன் வளர்ப்பவர்களின் குடும்பம் ஆயுள் முழுவதும் பாவச்சிறையில் இருக்கும்.  எண்ணில் அடங்காத இன்னல்களை அடையும். அறிவை வளர்க்கத் தெரியாதவர்கள்தான்  நாய்களையும், பூனைகளையும் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். பறவைகளைப் பறக்க விடுங்கள்.  நாய், பூனைகளை அது விருப்பப்படி வெளியில் வாழ விடுங்கள். மீன்களை நீர்நிலைகளில் வாழ விடுங்கள். நீங்கள் அதற்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்தால், அவைகள் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று உணவிடுங்கள். அதுபோதும்.


" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

( குறள் - 322)


தனக்குக் கிடைத்ததை மற்ற உயிர்களுக்குப்  பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதலே,  அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் .இந்தத் குறளை வள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் ஏன்  வைக்க வேண்டும்?  எந்த உயிர்களையும் கொல்லாதீர்கள். துன்புறுத்தாதீர்கள். உங்களால் முடிந்தவரை மற்ற உயிர்களுக்கு உணவிட்டு காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்தவே  இந்தக் குறட்பாவை கொல்லாமை அதிகாரத்தில் வைத்துள்ளார் வள்ளுவர்.


வீட்டில் நாய், பூனை, பறவைகள், மீன்கள் வளர்த்துத் தங்கள் உயிர்நேயத்தைக் காட்டுபவர்கள் எல்லோருமே அதே வீட்டில் ஆடு,மாடு, கோழி, மீன் எல்லாவற்றையும் அடித்துக் கொன்று உணவாக உண்கிறார்கள். அப்போது எங்கே போனது அவர்களின் உயிர்நேயம்? 

நாய், பூனைகள் மீது நீங்கள்  காட்டும் அன்பை   ஆடு, மாடு,கோழிகள் மீதும் கொஞ்சம் காட்டுங்கள்.


நீங்கள் விலங்களுக்கு உணவிட்டால் நீங்கள்தான்  உண்மையான  உயர்திணை!

நீங்கள் விலங்களைக் கொன்று  உணவாக்கிக் கொண்டால் நீங்கள்தான் உண்மையான அஃறிணை!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்