Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆணையர் பதவி நீக்கம்: பள்ளிக்கல்வி இயக்குநராக அறிவொளி நியமனம்

 


பள்ளிக்கல்வித் துறையில் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் நடைமுறை நீக்கப்பட்டு, மீண்டும் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளையே இயக்குநராக நியமிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வி இயக்குநராக க.அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார்.


பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர் நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், துறை இயக்குநராக முன்பு நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக வசதிக்காக பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு முதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் 2019 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நடைமுறைக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.



ஆசிரியர் சங்கம் கோரிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆணையர் பதவியை நீக்கிவிட்டு பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளையே இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.


இதற்கிடையே, ஆணையராக இருந்த சிஜி தாமஸ் மாற்றப்பட்டு, 2021 மே 22-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரியான க.நந்தகுமார், பள்ளிக்கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரை நேரில் சந்தித்தும் முறையிட்டனர்.


இந்நிலையில், கடந்த மே 13-ம் தேதி, 14 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டபோது பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரும் மாற்றப்பட்டு மனிதவள மேலாண்மைத் துறை செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை. அந்த பதவி காலியாக இருந்தது.


இந்நிலையில், தொடக்கக்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) கூடுதல் திட்ட இயக்குநர்-1 வி.சி.ராமேஸ்வர முருகன் இடமாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக பணியமர்த்தப்படுகிறார்.


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் -செயலர் எஸ்.கண்ணப்பன் மாற்றப்பட்டு, தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி இடமாற்றம் செய்யப்பட்டு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராகவும், தற்போது அந்த பதவியில் இருந்துவரும் பெ.குப்புசாமி மாற்றப்பட்டு, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர்-செயலராகவும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்