Ad Code

Ticker

6/recent/ticker-posts

கல்வி சுற்றுலா

ஒவ்வொரு வருடமும் கோடையின் தாக்கம் அதிகரித்து க் கொண்டே செல்கின்றது. அது போல், சுற்றுலாத்துறையும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. கோடை விடுமுறை என்றவுடன் மனமெல்லாம் மலைப் பிரதேசங்களையும், கடற்கரை நகரங்களையும் அதிகம் வந்து போவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் எங்கே செல்வது எதையெல்லாம் சுற்றிப்பார்ப்பது என்பதில் அதிக குழப்பம் மக்களுக்கு ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது தான். உதகை, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, கொல்லிமலை, கன்னியாக்குமரி, தென்காசி , நெல்லை, தஞ்சை மற்றும் மதுரை அனைவரின் விருப்பத் தேர்வாக அமையும்.

உதகையின் காலநிலையை மக்கள் எப்படி விரும்புகின்றார்களோ அப்படியே மதுரையின் மணமான சமையலிலும் கரைந்து போகின்றார்கள் உல்லாசப் பிரியர்கள். குற்றாலத்தின் நீர் வீழ்ச்சியினை இரசிக்கும் அதே உள்ளம், ஆனைமலை மலையேற்றத்தில் குளிர்ந்து போகின்றது. சில இடங்கள் நாவினையும் உள்ளத்தினையும் சேர்த்தே மகிழ்த்துவிடும், செட்டிநாட்டின் அழகியல் போல… ஒரு கோடை விடுமுறையில் இத்தனை இடங்களையும் சுற்றிப் பார்ப்பதென்பது இயலாத காரியம் தான். ஆனால் ஒரு இடத்தினை முடிவு செய்து அப்பகுதியில் சுற்றியிருக்கும் அனைத்து இடங்களையும் நன்றாக சுற்றிப்பார்த்தல் என்பது நல்ல அனுபவத்தினை தரும். ஒரு குடும்பம் கொடைக்கானல் போன்ற பகுதியில் ஒரு மூன்று நாட்கள் தங்கி ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது அவர்களிடத்தில் பத்தாயிரம் ரூபாயாவது இருக்க வேண்டும். இதனோடு ஒப்பிடுகையில் உதகைக்கு கொஞ்சம் கூடுதலாக தேவைப்படும். காரணம் உதகை என்பது பல்வேறு பயணங்களை மேற்கொள்ளத் தூண்டும் ஒரு மையப்புள்ளியாகும்.

உதகை

சென்னை மாகாணத்தின் கோடைத் தலைநகரம். மலைகளின் இளவரசி. நீலமலைகளின் தாய்மடி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் உதகை முன்பு சொன்னது போல் பல்வேறு பயணங்களை மேற்கொள்ள வைக்கும் மையப்புள்ளியாகும். குன்னூர் வழியாக உதகை அடைவது இயல்பான ஒன்று, ஒரு மாறுதலுக்காக காட்டேரி வழியே கீழறங்கி மஞ்சூர் வழியாக உதகை செல்வது புதுவித, நெரிசலற்ற அனுபவமாக இருக்கும். பைக்காரா, அவலாஞ்சி, படகு இல்லம், மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சி, சாக்லேட் கண்காட்சி, உதகை மலை இரயில் என்று சிறுவர்களை அழைத்துக் கொண்டு பொழுது போக்க மிக நல்ல இடம் இது. உணவுடன் கூடிய தங்குமிடங்களும் இங்கு ஏற்கத்தகுந்த விலையில் கிடைக்கும். இணையத்தில் முன்பதிவு செய்துவைத்துவிட்டு பின்னர் கிளம்புவது நலம். உதகையை சுற்றிப் பார்க்க கோடை காலம் சிறந்தது என்பதால் நிறைய பயணிகள் உதகைக்கு வருகை புரிவார்கள். அதனால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தடைவீர்கள். கோத்தகிரியில் கேத்ரின் நீர்வீழ்ச்சி, ஜான் சலீவன் இல்லம், ரங்கசாமி பாறை, கொடநாடு காட்சி முனை ஆகிய இடங்களும் சுற்றுலாத்தளங்கள் தான். அதையும் இரசித்தவாறே வீடு திரும்பலாம். இல்லையென்றால் உதகையில் இருந்து மைசூர் சென்று கர்நாடாகவின் எழிலினை காணலாம்.

என்னதான் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றாலும் இந்தியாவில் மலை மீது சரிவு பாதைகளில் பயணிக்கும் ஒரே அடுக்கு பற்சக்கர ரயில் என்ற சிறப்பை பெற்றது இந்த நீலகிரி மலை ரயில். 1908 தொடங்கப்பட்ட இந்த ரயிலுக்கு அன்று இருந்த அதே கிராக்கி இன்றும் இருக்கிறதாம். ஆம் எப்போதும் கூட்ட நெரிசலோடு தான் உதகைக்கும், மேட்டுப்பாளையத்திற்கும் இடையே பயணிக்கிறதாம் இந்த மீட்டர் கேஜ் ரயில். UNESCO ,உலக பாரம்பரியத்தினை குறிப்பிடும் தளத்திலும் நீலகிரி ரயிலைக் குறிப்பிட்டுள்ளது.

 


 

கொடைக்கானல்

நீர்வீழ்ச்சி, ஏரி, படகு இல்லம் என்று அனைத்தும் அடங்கிய மற்றுமொரு மலை சுற்றுலாத்தளம். பழநியில் இருந்து மலைவழியாக செல்பவர்களும் உண்டு, தேனி செல்லும் வழியில் இருந்து பிரியும் காட்ரோடு வழியாக செல்பவர்களும் உண்டு. அந்த வழியாக செல்பவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி. இரயில் மூலம் இப்பகுதிக்கு வர விரும்பினால், கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் கொடைரோடு ரயில் நிலையம். இங்கிருந்து கொடைக்கானல் 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது.  கோடைக்காலங்களில் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல்கள் என இரண்டும் தவிர்க்க முடியாதது. யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து தைலம் தயாரிக்கும் தொழிலை இங்கு குடிசைத் தொழிலாக செய்துவருகின்றார்கள். நேரம் இருப்பவர்கள் அதனை நேரடியாக சென்று பார்வையிடலாம். பைன்மரக்காடுகள் தனிமை விரும்பிகளுக்கான சுகந்தமான தேர்வாக இருக்கும். குறிஞ்சி ஆண்டவர் கோவில் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் விருப்பம் போல் நேரம் செலவிடலாம். சாந்தி பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், கொடைக்கானல் சூர்ய ஆய்வுமையம், டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகை அனைத்தும் கொடைக்கானலில் அநேக மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களாகும்

 


 

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை

பொள்ளாச்சியின் அழகிற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றதென்றால் அது அப்பூமியின் பசுமை வனப்பு தான். திரும்பும் இடமெங்கும் நீர்நிலைகளையும் தோப்புகளையும் கொண்டிருக்கும் ஒரு அழகிய பகுதி. பொழில் வாய்ச்சி என்ற பெயரிலிருந்து மருவிய பொள்ளாச்சியில் உலகப்பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தையினை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காணலாம். மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை ஆகியவற்றையும் பார்வையிடலாம். பொள்ளாச்சியில் அதிகாலையில் செலவு செய்துவிட்டு ஒரு சாகச பயணமாக வால்பாறை நோக்கி பயணித்தால் அழகாக இருக்கும். வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியிலும் அதிகம் என்பதால் காலைப்பொழுது அல்லது மாலைப் பொழுதுகளில் ஆழியாறு மற்றும் மாசாணியம்மன் கோவிலுக்கு செல்வது நலம். வால்பாறை பொள்ளாயிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. ஆழியாறில் இருந்து நாற்பத்தி மூன்று கிலோமீட்டர். சாகச பயணம் என்று சொல்வதற்கான காரணம் என்னவென்றால், ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்திற்கும் நீங்கள் ஒரு கொண்டை ஊசி வளைவினை எதிர்பார்க்கலாம். கூழாங்கல்லாறு, சின்னக்கல்லாறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை ஆகியவற்றை இரசிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் உங்களின் வண்டியை நள்ளிரவில் யானைகள் துரத்தலாம். வால்பாறையில் இருந்து நூற்றேழு கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட, புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி இருக்கின்றது. மலையினூடே நீண்ட தொலைவு பயணிப்பது உங்களுக்கு புதுவித அனுபவத்தினை தரும். இல்லையென்றால் டாப்ஸ்லிப், பரம்பிக்குளம் என்று வேறொரு பாதையிலும் பயணித்து மேற்குத் தொடர்ச்சியின் அழகினை இரசிக்கலாம்.

 

தேனியும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பிரதேசங்கள்

மே மாதத்தில் ஒரு குறிப்பிட்ட எட்டு தினங்களுக்கு தேனியின் வீதிகளெங்கும் களைகட்டும். காரணம், முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் இருக்கும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாதான். தமிழகத்தின் எப்பகுதியில் தேனிவாசிகள் இருந்தாலும், இவ்விழாவிற்கு ஒன்று கூடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சின்னமன்னூர் சனீஸ்வரன் கோவிலிற்கு சமயச் சுற்றுலாக்கள் வருபவர்களும் இங்கும் அதிகம். சுருளி நீர்வீழ்ச்சி இங்குரிந்து மிகவும் பக்கம். இதனை பார்வையிட்டுவிட்டு அப்படியே போடி, கம்பம் என்று சென்றால் செல்லும் வழியெங்கும் மலையின் சுகந்தத்தை அனுபவிக்கலாம். போடி மெட்டு, குரங்கனி, கம்பம் பள்ளத்தாக்கு, குமுளி என்று சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே இடுக்கி, மூணார் என்று கேரளத்திற்குள் பயணிக்கலாம்.


 

ஏற்காடு

உதகை, கொடைக்கானல் அடுத்து மக்களின் விருப்பத்தேர்வாக இருப்பது ஏற்காடு தான். சேலம் மாவட்டத்தில் இருக்கும் இம்மலைப் பிரதேசம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1515 மீட்டர் உயரத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கின்றது. சுற்றி நிறைய காடுகளுடன் கூடிய ஏரி இருப்பதால் இப்பகுதிக்கு இப்பெயர் இட்டுடிருக்கின்றார்கள். சுற்றுப் பகுதியில் காபி, ஆரஞ்சு, பேரிக்காய் போன்றவை விவசாயம் செய்யப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் முறையாக பயிற்சி பெற்ற மலையேற்றப் பயிற்சியாளர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபடலாம். இப்பகுதியில் மிக உயரமான மலைச்சிகரமாக சேர்வராயன் மலையும் அதன் உச்சியில் சேர்வராயன் கோவிலும் இருக்கின்றது.


 

மதுரை – இராமேஸ்வரம்-தனுஷ்கோடி

மதுரை என்பது கலாச்சார சுற்றுலாவிற்கும், உணவுச் சார்ந்த சுற்றுலாவிற்கும் மிக பொருத்தமான இடம். பல்வேறு சுவையான உணவுகளை சுவைப்பதற்கு ஏரளமான உணவங்கள் இங்கு இருக்கின்றன. மேலும் மீனாட்சி அம்மன் கோவில், திருமலைநாயக்கர் மஹால், பாண்டி கோவில், கள்ளழகர் கோவில் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாகும். அங்கிருந்து இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள் சுற்றுலா விரும்பிகள்.

மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு இரயில் போக்குவரத்து இருப்பதால் பயணிகள் இரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றார்கள். காரணம், கடலின் மேல் அமைந்திருக்கும் இரயில் பாதை தான். பாம்பன் பாலம் என்பது அனைவரின் பிரதான நிறுத்தல் இடமாகும். கடல் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்தில் நின்று கொண்டு அந்த சிறிய தீவினை இரசிப்பது அழகு.

இராமேஸ்வரம், திருப்புலானி, நவபாசானம், இராமர் பாதம் என்று ஒவ்வொரு தீவின் ஒவ்வொரு பகுதியிலும் புகழ்பெற்ற திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்பவர்களும் உண்டு. மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் என்று சமீபத்தில் இந்திர அரசாங்கம் இப்பகுதியை அறிவித்திருந்தாலும், அத்தீவின் எழிலையும் மாயம் நிறைந்த அழகினையும் காண அத்தீவு செல்பவர்கள் அதிகம்.


 

கன்னியாகுமாரி

இந்தியாவின் முடிவுப் புள்ளி, இந்தியப் பெருங்கடலின் ஆரம்பப் புள்ளி என எப்படியும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இப்பகுதியில் கடலிலிருந்து சூரியன் உதிப்பதை காண்பது பயணிகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். கடற்கரையோரத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் கடற்சார் பொருட்களை வாங்கலாம். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை கண்டுவர தமிழக அரசு படகு சவாரியினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. கன்னியாகுமாரியில் இருந்து அப்படியே கேரளத்திற்கு பயணிப்பவர்கள் அதிகம்.


 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்