மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.
பல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. இம்மன்னன் தன் நாட்டின் பல பகுதிகளில் மலைகளைக் குடைவித்து கோயில்கள் அமைத்திருக்கிறான். அவற்றில் மண்டகப்பட்டு என்ற ஊரில் திருமாலுக்கும், நான்முகனுக்கும், சிவபிரானுக்கும் ஆகக் குடைவித்த கோயிலொன்று உண்டு. "இக்கோயில் மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றி தோற்றுவித்தேன்” எனக் கூறுகிறான். ஆதலின் இதற்கு முற்பட்ட கோயில்கள் இவை அனைத்தையும் கொண்டு அமைக்கப்பட்டன என்பது தெளிவு.
விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு குடைவரை கோவில் அல்லது மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படும் கோவில்தான் வட தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோவில் என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன. இந்த கோவில் இலக்சிதன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. மலையை குடைந்து கட்டப்படும் கோவிலே குடைவரை கோவில் என்று அழைப்படுகிறது.
கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சிபுரிந்த கலைகளிலும், ஆட்சியிலும் சிறந்து விளங்கிய பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இந்த கோவில். வட தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோவில் என்றும், தமிழ்நாட்டு குடைவரைகளில் ஆண்டு குறிப்பிடப்பட்ட பழமையான கற்கோவில் என்ற வகையிலும் தமிழக கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது
இக்குடைவரைக் கோயில் மூன்று கருவறைகளை உடையதாக இருக்கிறது. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை கொண்டள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறே முகமண்டபமும் அமைக்கப்பட்டள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்தக் கோயிலை செங்கல், மரம், உலோகம், சுதை இன்றி நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவதாக குறிப்பிடுகிறது.
0 கருத்துகள்