Ad Code

Ticker

6/recent/ticker-posts

யானைப் போர்

 யானைப் போர்

மன்னர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அரிய வைரங்கள், முத்து மாலைகள், தங்க நகைகள், பட்டு வஸ்திரங்கள் பற்றிய செய்திகள

 வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது. ஆனால், பல்வேறு அரசர்களுக்கு பரிசாகப் அளிக்கப்பட்ட மிருகங்கள், அதன் பின்புலம் உள்ள சுவாரஸ்யமான வரலாறு இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை.


இந்தியாவில் இருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை, காண்டாமிருகம், மான் ஆகியவைபரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காண முடிகிறது. அதுபோலவே, ஆப்பிரிக்காவில்இருந்து இந்தியாவுக்கு ஒட்டகச்சிவிங்கிகள், கிளிகள், பூனைகளும்கூட பரிசாகத் தரப்பட்டு இருக்கின்றன. 1515-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை, போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். அதற்கு முன்பு வரை  அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை. அந்த காண்டாமிருகத்தை, போப்புக்குப் பரிசாக அனுப்பிவைக்க முடிவு செய்து, மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசன்.


அந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது. தனக்குப் பரிசாக கொண்டுவரப்பட்ட அந்த அதிசயமிருகம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று போப் விரும்பியதால், புகழ் பெற்ற ஓவியர் டூரரை அழைத்து, அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயே அவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்து முடித்த அதிசயமும் நடந்தது. காண்டாமிருகங்கள் இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது போல ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரேக்கம், சீன அரசர்களுக்குப் பரிசாக யானைகளும் அனுப்பிவைக்கப்பட்டன.



மன்னர் ஒரு யானையை பரிசாக அனுப்பும்போது, அதனைப் பராமரிப்பதற்காக 12 பேரையும் கூடவே அனுப்பிவைப்பது வழக்கம். இரண்டு பேர் அதற்கு உணவு தருபவர்கள். இருவர் மாவுத்தர்கள். இரண்டு பேர் யானை வீதியில் உலா வரும்போது முன்னே குதிரையில் சென்று அறிவிப்பவர்கள். இரண்டு பேர் யானையை அலங்காரம் செய்பவர்கள்.ஒருவர்,யானை மீது உட்காரும் பூச்சிகள விரட்டுபவர்.ஒருவர் யானை லத்தியைசுத்தப்படுத்துகிறவர்.ஒருவர் யானைக்கு மருத்துவம் பார்ப்பவர்.இன்னொருவர் யானைக் கொட்டிலில் காவலாளி.இந்த 12பேர் சேர்ந்துதான் யானையைப் பராமரிக்க வேண்டும். 


கேரளாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட யானைகள், லிஸ்பனில் இருந்த மிருகக்காட்சி சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. 1551-ம் ஆண்டு ஒருயானையை மலபார் பகுதியில் பிடித்து, அதை கப்பலில் ஏற்றி ஸ்பெயின் மன்னருக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர். அதன் பெயர் சுலைமான். அந்த யானையுடன் இன்னொரு கப்பலில் சிங்கமுகக் குரங்குகள், மயில்கள், புனுகுப்பூனை ஆகியவையும், யானையை பராமரிக்கும் ஊழியர்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். யானையை கொண்டுவரப்பட்ட கப்பலை பிரெஞ்சுக் கடற்கொள்ளையர்கள்  தாக்கினர். அவர்கள், அதற்கு முன் யானையைப் பார்த்ததே இல்லை. ஆகவே அதை, நரகத்தில் இருந்து தப்பிவந்த கொடிய விலங்கு என்று நினைத்து பயந்து, தலைதெறிக்க ஓடினர். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட யானை , ஸ்பெயின் தேசம் எங்கும் கால்நடையாக நடத்திச் செல்லப்பட்டு மன்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வீதம் அந்த யானை ஓர் ஆண்டு காலம் நடந்து, வியன்னா நகரை அடைந்தது. தாங்க முடியாத குளிர், யானைக்கு என்ன உணவு கொடுப்பது என்று தெரியாத குழப்பம், யானை கத்தும் போதெல்லாம் அதற்குக் கொடுக்கப்பட்ட அடி என அத்தனையும் ஒன்றுசேர்ந்து அந்த யானையை கொன்று விட்டன. 1553-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த யானை இறந்தது. அந்த யானையின் நினைவாக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய நாவலாசிரியர் ஜோஸ் சரமாகோ 'யானையின் பயணம் 'என்ற நாவல் எழுதி இருக்கிறார்.இந்திய யானையுடன் சென்ற இரண்டு மாவுத்தர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர்.மற்றவர்கள்  வங்காளத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் உருவச் சித்திரம் ஸ்பெயினில் இன்றும் ஓவியமாகக் காணப்படுகின்றன. 




1398-ம் ஆண்டு சாமர்கண்ட்டில் இருந்து மங்கோலியா வம்சத்தைச் சேர்ந்த தைமூர் ஒரு பெரும் படையுடன் கிளம்பினார்.செப்டம்பர் 22-ம் தேதி தைமூரின் படை , சிந்து நதிக்கரையை அடைந்தது.ஒரு லட்சம் பேர் கொண்ட படையுடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்டார் தைமூர்.ஆனாலும், தைமூர் பயந்தது இந்தியாவில் இருந்த யானைப்படையை பார்த்துத்தான்! டெல்லி சுல்தான் முகமது ஷாவின் யானைப் படையை எதிர்கொள்ள, தைமூர் பயந்துகொண்டு இருந்தான்.கரிய உருவங்கள் கம்பீரமாக  திரண்டு நிற்பதைப் போர் முனையில் கண்டபோது, அவன் மனம் இதுபோன்ற வலிமையான மிருகம் தன்னிடம் இல்லையே என்று ஆதங்கப்பட்டது.தைமூரின் வீரர்கள் ஷாவின் படை வீரர்களை வெறிக்கொண்டு தாக்கினார்.யானைப் படையைச் சமாளிக்க வைக்கோல் மூட்டை ஏற்றிய எருமைகளைக் களத்தில் ஓடவிட்டு வைக்கோலுக்குத் தீ வைத்தார் தைமூர்.இதனால் , வெற்றி அவர் வசமானது.தனது தேசத்துக்கான வெற்றிப் பரிசாக 120 யானைகளை டெல்லியில் இருந்து கொண்டு சென்றான் தைமூர்.அந்த யானைகளை சாமர்கண்ட் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.யானையின் கறுப்பு நிறம் அவனுக்குப் பிடிக்கவில்லை.எனவே  யானைகளுக்கு பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணம் தீட்டப்பட்டது.இரவில் கேட்கும் யானையின் அலறல் அவனைப் பயமுறுத்தியது.ஒரு வாரத்திலேயே,  அவனுக்கு யானைகளைப் பிடிக்காமல் போய்விட்டது.அவற்றைப் பட்டினி போட்டு வைதைத்ததோடு கடுமையான விவசாயப் பணிகளையும் செய்வதற்கு அனுப்பிவைத்தான்.இதனால், 16 யானைகள் மெலிந்து நோயுற்று இறந்து போயின.மெலிந்துபோன யானைகளைப் பார்க்கப் பிடிக்காமல், அவற்றைத் தன் கண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தான் இப்படி பரிசாகச் சென்ற யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவமே எல்லா காலத்திலும் நடந்து இருக்கின்றன. 

(நன்றி -எனது இந்தியா -எஸ்.ராமகிருஷ்ணன்)

வாசிப்போம் வாருங்கள் 

AS TOLD AT THE EXPLORERS CLUB: MORE THAN FIFTY GRIPPING TALES OF ADVENTURE 

        - GEORGE PLIMPTON

SULEIMAN THE ELEPHANT

      - MARGARET RETTICH



கருத்துரையிடுக

0 கருத்துகள்