சோழர்களின் கோயில் கட்டடக் கலைக்குச் சான்று, கல்வெட்டுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடு, சிற்பங்கள் அப்புறம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில ராஜேந்திர சோழன் தான் கட்டினார் அப்படிங்கறதுக்கான ஆதாரம் இவை எல்லாவற்றையும் ஒரு சேரபாக்கணும் னா நாம எசாலத்துக்கு தான் போகணும்.
விழுப்புரத்தில் இருந்து 27 வது கிலோமீட்டர் ல அமைஞ்சி இருக்கும் ஊர் தான் எசாலம்.
இங்கதான் இருக்கு அருள்மிகு ராமநாத ஈஸ்வரர் கோயில்.
மேலே இருந்து சில படிக்கட்டுகள் கீழ இறங்கி தான் கோயிலுக்கு உள்ள போகணும்.
அழகான கருங்கல் கட்டுமானம்.
பலி பீடம் நந்தி.
ராமநாத ஈஸ்வரர தரிசிக்க இந்த படிக்கட்டுகளை கடந்து போகணும்.
அதுக்கு முன்னாடி நாம கோயிலை சுத்தி வந்துடலாம்.
கோயிலின் திருச்சுற்றில் முதலில் நமக்கு காட்சி தர்றது விநாயகர். அவருக்குப் பக்கத்துல தட்சிணாமூர்த்தி. பழைய சிற்பம் பின்னம் பட்டதால புதிய சிற்பத்த முன்னாடி வைச்சு இருக்காங்க. அப்புறம் விஷ்ணு,
பிரம்மா இவருக்குப் பக்கத்தில் இருக்கும் துர்க்கை சிற்பம் ரொம்பவும் அழகா இருக்கு. அதுவும் ஒரு காலை முன்னும் இன்னொரு கால பின்னும் வைச்சு நின்னுட்டு இருக்கிறது இன்னமும் சிறப்பு.
இவங்கள எல்லாம் பாத்துட்டு கோயிலுக்குள்ள போறோம். நமக்கு முதல்ல தரிசனம் தர்றது அழகே வடிவான அம்மை திரிபுர சுந்தரி.
திருக்கோயிலின் மகா மண்டபம். உருளை வடிவ தூண்கள் தாங்கி நின்னுட்டு இருக்கு.
பிரம்மாண்ட வாயிற் காப்போர்.
இவர்களைக் கடந்ததும் அர்த்த மண்டபம்.. இங்கும் உருளை வடிவத் தூண்கள். ஆனால் முந்தையதை விட மிகவும் அழகான வடிவத்தில்.
கருவறையில் அருளின் வடிவமான லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார் ராமநாத ஈஸ்வரர்.
கோயிலின் விமானம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வட்ட வடிவில் முழுவதும் கருங்கற்களால் இது அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிற்பம் மிகவும் அழகானது.
கோயில் முழுவதும் கல்வெட்டுகள். ராஜேந்திர சோழன் காலம் தொடங்கி கோப்பெருஞ்சிங்கன் காலம் வரையிலானவை இவை.
கோயில் கொண்டுள்ள இறைவன் திருவிராமீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதரால் இக்கோயில் எடுக்கப்பெற்றது என்றும் தெரிவிக்கின்றன.
ஊருக்குப் பெயர் எய்தார். இது எப்போதில் இருந்து எசாலம் ஆச்சுன்னு தெரியல.
அப்புறம், 1987ல கோயில் திருப்பணிகள் நடந்துச்சு. அப்போ மண்ணுக்குள் புதைஞ்சு இருந்த செப்பேடு கிடைச்சது.
அதுதான் சோழர் வரலாற்றைச் சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்த எசாலம் செப்பேடு.
15 இதழ்களைக் கொண்டதாக இருக்கிறது இந்தச் செப்பேடு.
முகப்பில் புலி முத்திரை, இரண்டு மீன்கள் வில் உள்ளிட்டவை காட்டப்பட்டுள்ளன.
மேலும் வடமொழியில் அரசர்களின் திருமுடி வரிசைகளின் ரத்னங்களில் திகழ்வதான இது பரகேசரி வர்மனான ராஜேந்திர சோழனின் சாசனம் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
செப்பேட்டின் பதினைந்து ஏடுகளில் முதல் 4 ஏடுகள் வடமொழியிலும் மற்ற ஏடுகள் அனைத்தும் தமிழிலும் எழுதப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக வடமொழி ஏடுகளில், ராஜராஜ சோழன் குறித்து சொல்லும் போது, கங்க நாட்டார் வங்க நாட்டார் கலிங்க நாட்டார் மகத நாட்டார் மாளவர் சிங்களர் ரட்டர் ஒட்டர் கடாரர் கேரளர் கௌடர் பாண்டியர் முதலிய எல்லா அரசர்களையும் ராஜராஜன் வென்றான். தான் வெற்றி பெற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு தன் பெயரில் ராஜராஜேசுவரம் எனும் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினான் என்று புகழ்கிறது.
மேலும் ராஜேந்திர சோழன் குறித்து சொல்லும் போது ராஜராஜனின் மகனான இவன் சௌந்தர்யத்தின் திருமாளிகை, வீரத்தின் விசால விளையாட்டுத் திடல். துணிவு பேரறிவு காதல் கருணை போன்றவற்றின் பிறப்பிடம். உலக உயிர்களை மகிழ்விக்கும் சக்ரவர்த்தி, கல்வியாகிய நதிக்கு கடல் போன்றவன். உதயத்தின் இருப்பிடம் இவன் என்றெல்லாம் புகழ்கிறது.
மேலும், நற்குணங்களின் தொகுதியான ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான். சிவபெருமானின் திருவடியாகிய பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்தான் என்றும் சொல்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அந்த மாபெரும் கோயிலை ராஜேந்திர சோழன் எடுப்பித்தான் எனும் தகவல் எசாலம் செப்பேட்டில் தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சோழர் வரலாற்றில் குறிப்பாக ராஜேந்திர சோழன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
எசாலம் செப்பேடு கண்டறியப்பட்ட போதே பல்வேறு செப்புத் திருமேனிகளும் மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை இப்போதும் கோயிலுக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ராமநாத ஈஸ்வரர் கோயிலுக்கு வெளியே கம்பீரமாக அமர்ந்து இருக்கும் பல்லவர் கால ஐயனார் எசாலம் கிராமத்தின் பழமைக்கு மற்றுமொரு சாட்சி..
நன்றி -விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
0 கருத்துகள்