பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் என்பவை பயணத்தின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வாக உருவாக்கப் பட்டுள்ளன. என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் பயணக் காப்பீடுத் திட்டங்கள் தீர்வைத் தருகின்றன என்று பார்ப்போம்.
மருத்துவ அவசரம் மற்றும் விபத்து
பயணங்கள் மிகப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஆனால், சில எதிர்பாராத விஷயங்களால் பாதிப்புக்குள்ளாவதை முன்கூட்டியே எச்சரிக்கையாகத் திட்டமிட்டு சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பயணக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியமான அம்சம், பயணத்தின்போது ஏற்படுகிற மருத்துவ அவசரங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதுதான். இதுபோன்ற நெருக்கடியால் உண்டாகும் நிதித் தேவையைப் பயணக் காப்பீடு பூர்த்தி செய்யும். மருத்துவ அவசரங்கள் மட்டுமல்லாமல், பயணத்தில் விபத்து ஏதேனும் நடந்தால், அதற்கும் பயணக் காப்பீடு உதவியாக இருக்கும்.
விபத்துகள் எப்போதுமே மோசமானவை. அதுவும் சுற்றுலா பயணத்தின்போது விபத்து ஏற்பட்டால் மொத்த பயணமும் பாதிப்பதுடன், தெரியாத ஊரில் தெரியாத இடத்தில் ஆதரவின்றி நிற்கும் நிலை உண்டாக நேரிடும். இத்தகைய சூழலில் பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் தேவையான உதவிகளை வழங்கும் என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றன.
பொருள்கள் தொலைந்துபோகுதல்...
பயணத்தின்போது பொருள்கள் தொலைந்துபோவது பயண அனுபவத்தைக் கெடுப்பதுடன், பயணச் செலவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் பொருள்கள் தொலைவதால் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிதிச் செலவுகளைச் சமாளிக்க உதவும். ஆனால், பொருள்கள் முழுமையாகத் தொலைந்தால் மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். பகுதியளவு தொலைந் தாலோ, சேதமானாலோ காப்பீட்டில் இழப்பீடு கிடைக்காது.
மேலும், போக்குவரத்து நிறுவனம் ஏதேனும் இழப்பீட்டை வழங்கினால், மீதமுள்ள இழப் பீட்டை மட்டுமே காப்பீட்டுத் திட்டம் வழங்கும். உதாரணமாக, மொத்த இழப்பு ரூ.10,000 எனில், போக்குவரத்து நிறுவனம் ரூ.4,000 வழங்குகிறது எனில், காப்பீடு நிறுவனம் மீதமுள்ள ரூ.6,000 இழப்பீட்டை மட்டுமே வழங்கும்.
வேறு இடத்துக்கு மாறிப்போன பொருள்கள்
விமான நிலையத்தில் இறங்கி விட்டீர்கள். புதிய இடத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக் கும் உங்களுடைய பொருள்கள் வந்து சேர்ந்தால் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுவீர்கள். ஆனால், உங்களுடைய பொருள்கள் வரத் தாமதமாகிறது. உங்களுக்கு பதற்றம் அதிகமாகிறது. நீங்கள் வந்த விமான நிறுவனத்திடம் விசாரித்தால், வேறொரு இடத்துக்கு உங்களுடைய பொருள் போய்விட்டதாகக் கூறுகிறார்கள். அந்தப் பொருள் திரும்ப உங்களிடம் வந்து சேர சில நாள்கள் ஆகலாம் என்று கூறுகிறார்கள் எனும் பட்சத்தில் உங்களிடம் பயணக் காப்பீடு இருந்தால்தான் பதற்றப்படாமல் இருக்கலாம். உங்களுடைய பொருள் உங்களை வந்துசேரும் வரைக்கும் தேவையான அத்தியாவசியப் பொருள்களுக் கான செலவு பணத்தைக் காப்பீடு நிறுவனம் வழங்கும்.
பயணம் ரத்தாகுதல் மற்றும் பயண நாள்கள் குறைதல்
சுற்றுலாப் பயணங்களை நாம் முன்கூட்டியே நன்றாகத் திட்டமிட்டாலும், சில நேரங்களில் கடைசித் தருணத்தில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். அல்லது உடல் உபாதைகள் காரணமாகவோ, விபத்து, நெருங்கியவரின் இறப்பு போன்ற காரணங்களாலோ பயண நாள்களைக் குறைக்க வேண்டிவரலாம். அதுபோன்ற சமயங்களில் திரும்ப வழங்கப் படாத, முன்கூட்டியே செலுத்தப்பட்ட விடுதி அறை மற்றும் விமான டிக்கெட் உள்ளிட்டவை போன்றவற்றுக்கான செலவுகளைக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
உங்களுடைய காப்பீட்டுத் திட்டத்தில் எந்த சூழல்களில் எல்லாம் இழப்பீடுகளை வழங்கும் என்ற நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்.
விமானம் தாமதமாகுதல்
உங்களுடைய விமானம் குறித்த நேரத்தில் வராமல் சில மணி நேரம் தாமதமானால் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள விதிகளின்படி அந்த சில மணி நேரங்களில் ஆகக்கூடிய உணவு, குளிர்பானம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கான பணத்தைக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
மேற்கண்ட இழப்பீடுகள் தவிர, பயணக் காப்பீட்டுத் திட்டங்களில் கூடுதல் இழப்பீடு களும் கிடைக்கும். சாகச விளையாட்டுகள், ஏற்கெனவே உள்ள நோய்கள், லேப்டாப், மொபைல் போன்ற பொருள்கள் தொலைதல் போன்றவை அடங்கும். மேலும், கொரோனா காரணமாகச் சில நாடுகளுக்குச் செல்வதற்கு பயணக் காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
பயண இடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அங்குள்ள நிபந்தனைகள், விதிமுறைகள் என்னென்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பயணம் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும்; வாழ்க்கையில் சலிப்பான உணர்வில் இருந்து வெளிவர உதவும். அதேபோல், ஒரு சரியான பயணக் காப்பீட்டுத் திட்டம் கவலை இல்லாத இனிமையான பயணத்தை உறுதி செய்யும். எனவே, பயணத்துக்குத் தயாராகும் முன் சரியான பயணக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொள்வது அவசியத்திலும் அவசியம்!
0 கருத்துகள்