திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
பழமொழி
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்
பொன்மொழி
கல்வியின் வேரானது கசக்கும் அதன் விளைச்சல் இனிக்கும்
-அரிஸ்டாட்டில்
பொதுஅறிவு
உலகின் உயரமான சிகரம் எது?
எவரெஸ்ட்
ஆகஸ்ட்- 2 இன்று
உலக ஆங்கிலோ இந்தியன் தினம் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதைகள்
கோடாரி உத்தி
மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.
நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
இன்றைய செய்திகள்
*நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்? - அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தகவல்
*வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு: அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு
*நகராட்சி தலைவர்கள், கமிஷனர்களுக்கு ரூ.23 கோடியில் 187 புதிய வாகனங்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
*நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்
*மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
*ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்
*5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல்
0 கருத்துகள்