Ad Code

Ticker

6/recent/ticker-posts

முதல் அலகு தேர்வு சமூக அறிவியல் விடைகள்|விழுப்புரம் மாவட்டம்


பகுதி-அ

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

 

1. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

  1. லெனின்
  2. மார்க்ஸ்
  3. சன் யாட் சென்
  4. மா சே துங்

விடை ; லெனின்

2. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  1. ஜெர்மனி
  2. ரஷ்யா
  3. போப்
  4. ஸ்பெயின்

விடை ; போப்

3 . பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

  1. ரூஸ்வெல்ட்
  2. சேம்பெர்லின்
  3. உட்ரோ வில்சன்
  4. பால்டுவின்

விடை ; உட்ரோ வில்சன்

4. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது.

  1. கடற்கரை
  2. தீபகற்பம்
  3. தீவு
  4. நீர்ச்சந்தி

விடை ; தீபகற்பம்

5.நமது அடிப்படை கடமைகளை இடமிருந்து பெற்றோம்.

  1. அமெரிக்க அரசியலமைப்பு
  2. கனடா அரசியலமைப்பு
  3. ரஷ்யா அரசியலமைப்பு
  4. ஐரிஷ் அரசியலமைப்பு

விடை : ரஷ்யா அரசியலமைப்பு

6.நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ____________ ஆவார்.

 

  1. குடியரசுத் தலைவர்
  2. தலைமை நீதிபதி
  3. பிரதம அமைச்சர்
  4. அமைச்சர்கள் குழு

விடை : குடியரசுத் தலைவர்

7. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது

 

  1. வேளாண்மை
  2. தானியங்கிகள்
  3. வர்த்தகம்
  4. வங்கி

விடை ; வேளாண்மை

 


பகுதி-ஆ

8. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா

9. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

  • இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 நடைபெற்ற ஒட்டவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
  • இம் மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக் கொண்டன

10. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
  • மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியான மலைகள்
  • இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு தொடர்ச்சி மலைகள்

  • கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
  • கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியற்ற மலைகள்
  •  இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.

11. ’வேளாண்மை’–வரையறு.

வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

12. இந்தியாவின் செம்மொழிகள் எவை?

  • தமிழ்
  • சமஸ்கிருதம்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • ஒடியா

13. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

14. நாட்டு வருமானம் – வரையறு.

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

15. உலகமயமாக்கல் என்றால் என்ன?

உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.


பகுதி-இ

16)முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி

ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும்

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • இரண்டாவது முகாம் நேச நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு ஊருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்

  • தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று (chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு

  • ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே
    உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
  • ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது .
  • இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை

  • பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
  • ஜெர்மன் பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு

  • 1908இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீனஅரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
  • ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

பால்கன் போர்கள்

  • பால்கன் நாடுகள் 1912-ல் துருக்கியை தாக்கி தோற்கடித்தது.
  • 1913-ல் இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.
  • மாசிடோனியாவை பிரித்துக்கொள்வதில் பல்கேரியா, செல்பியாவையும், கீரிஸ்சையும் தாக்கியது.
  • இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கபட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்

  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற
    பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால் ஜெர்மனி முதல் தாக்குதலைத் ரஷ்யா மீது போர் தொடுத்தது

17)  ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945ஆம் ஆண்டு, ஜூன் 26ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுச்சபை

ஆண்டுக்கொருமுறை கூடும் இவ்வமைப்பில் நாடுகளின் நலன்சார்ந்த அம்சங்களும் முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன

பாதுகாப்பு அவை

பாதுகாப்பு சபையானது பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர்.

நிர்வாக அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும். இதன் பொதுச் செயலாளர் பொதுச்சபையில், பாதுகாப்புச்சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுககப்படுகிறார்.

பொருளாதார சமூக மன்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும். ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும்.

ஐ.நாவின் துணை அமைப்புகள்

  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organisation – FAO)
  • உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation -WHO)
  • ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UN Educational Scientific and Cultural Organisation – UNESCO)
  • ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் (United Nations Children’s Fund-UNICEF).
  • ஐ.நா.வளர்ச்சி திட்டம் (United Nations Development Plan -UNDP)

ஐ.நா.வின் செயல்பாடுகள்

உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐக்கிய நாடுகள் சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.

1960களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும். மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.

மிகச்சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நாவின் அமைதிப்படை. உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது.

அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய இராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.

18. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
  2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
  3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)

1. ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)

  • இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  1. உள் இமயமலைகள் / இமாத்ரி
  2. மத்திய இமயமலை / இமாச்சல்
  3. வெளி இமயமலை / சிவாலிக்

(i) உள் இமயமலை அல்லது இமாத்ரி (Greater Himalayas/Himadri)

  • உள் இமயமலை, மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.
  • இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. அதில் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
  • இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.

(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)

  • இது இமய மலையின் மத்திய மலைத் தொடராகும்.
  • வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
  • புகழ் பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.

(iii) வெளி இமயமலை / சிவாலிக்

  • இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
  • குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன.
  • இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ் (Duars) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் (Duns) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.

3. பூர்வாஞ்சல் குன்றுகள்

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
  • மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
  • டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது.

இமயமலையின் முக்கியத்துவம்

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

19. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

சமத்துவ உரிமை

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  • மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்
  • பொது வேலை வாய்ப்புகளினல் சம வாய்ப்பளித்தல்
  • தீண்டாமையை ஒழித்தல்
  • இராணுவ மற்றும் கல்வி சார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்

சுதந்திர உரிமை

  • பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்ககள்,  அமைப்புகள் தொடங்க உரிைம, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
  • குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
  • வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை
  • தொடக்க கல்வி பெறும் உரிமை
  • சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிைம

சுரண்டலுக்கெதிரான உரிமை

  • கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்
  • தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்

கல்வி கலாச்சார உரிமை

  • சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு
  • சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை

சமயச்சார்பு உரிமை

  • எந்த ஒரு  சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும் பரப்பும் உரிமை
  • சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
  • எந்தவொரு மதத்தையும் பரப்புவுதற்காக வரி
  • மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க உரிமை

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

  • தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்

20. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.

1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X – M) + NFIA
  • C – நுகர்வோர்
  • I – முதலீட்டாளர்
  • G – அரசு செலவுகள்
  • X – M- ஏற்றுமதி – இறக்குமதி
  • NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

3. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

4. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

5.  தலா வருமானம் (PCI)

  • தலா வருமானம் என்பது மக்களின்வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

6. தனிப்பட்ட வருமானம் (PI)

  • நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

7. செலவிடத் தகுதியான வருமானம் (DI)

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.

  21.உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

22) காலக் கோடு

1910 முதல் 1945 வரையிலான உலக வரலாற்று நிகழ்வுகள்

1914- முதல் உலகப் போர் தொடக்கம்

1918- முதல் உலகப் போர்  முடிவு

1920-பன்னாட்டு சங்கம் தொடக்கம்

1939- இரண்டாம் உலகப்போர் தொடக்கம்

1945- இரண்டாம் உலகப்போர் முடிவு

23) இந்திய வரைபடம்




24.இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்