Ad Code

Ticker

6/recent/ticker-posts

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி

 குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி



அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் கயெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்பதை பார்ப்போம்.


முதலில் குழந்தைகள் எந்தெந்த விரல்களைப் பயன்படுத்தி எழுதுகோல்களை பிடித்து எழுதுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். இதனை கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாக கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுது பொருட்களை வழங்க வேண்டும்.

 இதன் மூலம் எழுதும்போது அவர்களையும் அறியாமல் விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு விரல் வலி, கை வலி இல்லாமல் எழுதுவதில் கவனம் அதிகரிக்கும்.

 இரண்டாவதாக, எழுத்துக்களை அதன் வரிவடிவம் வளைவு, சுழி போன்றவற்றை வடிவம் மாறாமல் எழுதப் பழக வேண்டும். அவ்வாறு பழகும் போதுதான் கையெழுத்து அழகாகும். இதற்கு சிறு கட்டமிட்டப்பட்ட குறிப்பேடு, இரட்டை வரி, நான்கு வரி குறிப்பேடு பயிற்சியே சிறந்தது. இதன் மூலம் ஒரு எண் அல்லது எழுத்து, இந்த அளவில்தான் அமைய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள முடியும்.


மூன்றாவதாக, எழுத்துக்களை முறையான அமைப்பு, வடிவத்தில் எழுதக் கற்றுக் கொண்ட பின்னர், ஒரு வரி நேர்க் கோடு இட்ட  குறிப்பேட்டில் எழுதப் பழக வேண்டும். இதன் மூலம் எழுத்துக்களின் அடிப்பகுதியை எவ்வாறு கோட்டின் மேற்புறம் அமைத்து எழுதவேண்டும் மேல்நோக்கி மற்றும் கீழ் நோக்கிய எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியும்.


நான்காவதாக, எழுதும் வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் அமையவேண்டும். ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்று அளவை மாறுபடாமல், எழுத்துக்களின் அளவிலும் கவனம் செலுத்தி எழுத வேண்டும்.



குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.


2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.


3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.


4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.


5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..


6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.


7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.


இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது

பயிற்சியே சிறந்த ஆசான்! எனவே மீண்டும் மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் நிதானமாக எழுதும் சூழலிலும், "தேர்வு" போன்ற கால அவகாசம் அளித்து வேகமாக எழுத வேண்டிய சூழலும் அழகாக எழுத முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்