ஆங்கிலேயர்கள் 1857இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரை பிடிப்பதற்காக கேப்டன் வில்லியம் ஹாட்சன் சுமார் 100 வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார்.
ஹூமாயூனின் கல்லறையை ஹாட்சன் அணுகியபோது, டெல்லி தெருக்களில் இருந்த கிளர்ச்சியாளர்கள் எவரும் அவர்களை நோக்கிச்சுடவில்லை.
ஹூமாயூனின் கல்லறையில் இருக்கும் மக்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று ஹாட்சன் கவலைப்பட்டார். எனவே அவர் முதலில் கல்லறைக்கு அருகில் உள்ள இடிபாடுகளுக்கு பின்னால் மறைந்துகொண்டார்.
1857ஆம் ஆண்டு கிளர்ச்சியைப் பற்றி 'தி சீஜ் ஆஃப் டெல்லி' புத்தகத்தை எழுதிய, அமர்பால் சிங் இவ்வாறு கூறுகிறார். "ஹாட்சன், ராணி ஜீனத் மஹலை சந்தித்து பேரரசரை சரணடைய தயார் செய்வதற்காக தனது பிரதிநிதிகளான மௌலவி ரஜப் அலி மற்றும் மிர்ஸா இலாஹி பக்ஷ் ஆகியோரை கல்லறையின் பிரதான வாயில் வழியாக அனுப்பினார்.
ஷா ஜாஃபர் ஆயுதங்களைக் கீழே போடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இரண்டு மணி நேரமாகியும் எதுவும் நடக்கவில்லை.
தனது ஆட்கள் கல்லறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூட ஹாட்சன் நினைத்தார், ஆனால் ஜாஃபர் ஹாட்சனிடம் மட்டுமே சரணடைவார் என்றும், கூடவே ஜாஃபர் கொல்லப்படமாட்டார் என்று ஜெனரல் ஆர்ச்டேல் வில்சன் கொடுத்த வாக்குறுதியை ஹாட்சன் தனக்கு எதிரில் மீண்டும் சொல்லவேண்டும் என்று பேரரசர் முன்வைத்த நிபந்தனையுடன், ஹாட்சனின் பிரதிநிதிகள் வெளியே வந்தனர்
பேரரசர் முதலில் டெல்லியின் பழைய கோட்டையில் தஞ்சம் புகுந்தார். பகதூர் ஷா ஜாஃபரின் உயிரை எடுக்கமாட்டோம் என்று யார், எப்போது உறுதியளித்தார்கள் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலேய முகாமில் குழப்பம் இருந்தது.
கிளர்ச்சியாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சரணடைய விரும்பினால், எந்த நிபந்தனையும் வைக்கப்படக்கூடாது என்று கவர்னர் ஜெனரலின் உத்தரவுகள் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்தன.
ஆரம்பத்தில், ஆங்கிலேயர்கள் டெல்லிக்குள் நுழைந்தபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் கோட்டைக்குள் இருக்கும் தனது அரண்மனையில் தங்க முடிவு செய்தார்.
1857 செப்டம்பர் 16ஆம் தேதி கோட்டையிலிருந்து சில நூறு அடி தூரத்தில் உள்ள கிளர்ச்சியாளர் தளத்தை பிரிட்டிஷ் ராணுவம் கைப்பற்றியதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் இருப்பதால் அவர்கள் கோட்டைக்குள் நுழையவில்லை என்றும் செய்தி வந்தது.
செப்டம்பர் 19 அன்று, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் தனது முழு குடும்பம் மற்றும் பணியாளர்களுடன் அரண்மனையை விட்டு வெளியேறி அஜ்மேரி கேட் வழியாக பழைய கோட்டைக்கு செல்ல முடிவு செய்தார்.
செப்டம்பர் 20 அன்று, ஜாஃபர் 'புராணா கிலா'-வை (பழைய கோட்டை) விட்டு வெளியேறி ஹுமாயூனின் கல்லறையை அடைந்ததாக உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு தகவல் கிடைத்தது.
ஒருபுறம் ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியாளர்களை இரக்கமின்றி தூக்கிலிடுகிறார்கள், மறுபுறம் அவர்கள் பேரரசரின் உயிரை எடுக்கமாட்டோம் என்று சொல்கிறார்கள்.இந்த முரண்பாடு பற்றி நான் அமர்பால் சிங்கிடம் கேட்டேன்.
"முதல் காரணம், பகதூர் ஷா மிகவும் வயதானவர். அவர் இந்தக் கிளர்ச்சியின் பெயரளவிலான தலைவராக மட்டுமே இருந்தார். இரண்டாவது ஆங்கிலேயர்கள் டெல்லிக்குள் மீண்டும் நுழைவதில் வெற்றி பெற்றனர், ஆனால் வட இந்தியாவின் பிற பகுதிகளில் இன்னும் சண்டை நடந்து கொண்டிருந்தது. மேலும் பேரரசர் ஜாஃபர் கொல்லப்பட்டால், கிளர்ச்சியாளர்களின் உணர்வுகள் பற்றி எரியக்கூடும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். எனவே பகதூர் ஷா ஜாஃபர் சரணடைந்தால், அவரது உயிரைக் பறிக்காமல் விட்டுவிட வில்சன் ஒப்புக்கொண்டார்," என்று அவர் பதிலளித்தார்
வில்லியம் ஹாட்சன் தனது 'Twelve Years of the Soldier's Life in India' என்ற புத்தகத்தில், நேரில் பார்த்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி, 'ஹுமாயூனின் கல்லறையிலிருந்து முதலில் வெளியே வந்தவர் ராணி ஜீனத் மஹல். அதன் பிறகு பாட்ஷா பகதூர் ஷா ஜாஃபர் பல்லக்கில் வந்தார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாட்சன் முன்னால் சென்று ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு பேரரசரிடம் சொன்னார்.
ஜாஃபர் அவரிடம் கேட்டார், "நீங்கள் மட்டும்தான் தைரியசாலியா ஹாட்சன்? நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் சொல்வீர்களா?
அதற்கு கேப்டன் ஹாட்சன், ' சொல்கிறேன். நீங்கள் ஆயுதங்களை கைவிட்டால், உங்களுடைய உயிருடன் கூடவே ஜீனத் மஹல் மற்றும் உங்கள் மகனின் உயிர் காப்பாற்றப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க அரசு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் உங்களைக்காப்பாற்ற யாராவது முயன்றால், இந்த இடத்திலேயே உங்களை நாயைச்சுடுவது போல் சுட்டுத் தள்ளுவேன்," என்றார்.
பின்னர் வயதான பேரரசர் தனது ஆயுதங்களை ஹாட்சனிடம் ஒப்படைத்தார். ஹாட்சன் அதை தனது உதவியாளரிடன் கொடுத்தார்
நகரத்திற்குள் நுழைந்த பிறகு, பகதூர் ஷா ஜாஃபர் முதலில் பேகம் சம்ருவின் வீட்டில் வைக்கப்பட்டார். மேலும் அவரை கண்காணிக்க HM 61வது படைப்பிரிவின் 50 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பகதூர் ஷா ஜாஃபரை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட அதிகாரிகளில் கேப்டன் சார்லஸ் கிரிஃபித் ஒருவர்.
பின்னர் அவர் தனது ' தி நரேடிவ் ஆஃப் தி சீஜ் ஆஃப் டெல்லி' என்ற புத்தகத்தில், 'முகலாய வம்சத்தின் கடைசி பிரதிநிதி ஒரு வராண்டாவில் போடப்பட்டிருந்த எளிய கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் அமர்ந்திருந்தார். அவரது வெள்ளைத் தாடி கழுத்து வரை இருந்தது. அவரது தோற்றத்தில் கம்பீரம் இருக்கவில்லை. நடுத்தர உயரமும், 80 வயதைத் தாண்டியவருமான சக்கரவர்த்தி, வெள்ளை ஆடை அணிந்து, அதே துணியில் தலைப்பாகை அணிந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய இரண்டு வேலைக்காரர்கள் மயில் இறகுகளால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு அவர் மீது காற்றை வீசிக்கொண்டிருந்தனர். அவர் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. அவரது கண்கள் தரையில் பதிந்திருந்தன.
அவருக்கு மூன்றடி தூரத்தில் மற்றொரு கட்டிலில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். இரண்டு பிரிட்டிஷ் வீரர்கள் அவருக்கு இருபுறமும் பயோனெட்டுகளுடன் நின்று கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் காப்பாற்றும் முயற்சி நடந்தால், அங்கேயே அவரை தன் கைகளால் சுட வேண்டும் என்று அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
இளவரசர்களை அடையாளம் காண அரச குடும்ப உறுப்பினர்களை ஹாட்சன் அழைத்துச் சென்றார்
மறுபுறம், பேரரசர் பிடிக்கப்பட்ட பிறகு, செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஹுமாயூனின் கல்லறைக்குள் இருந்த எஞ்சியிருக்கும் இளவரசர்களை என்ன செய்வது என்று ஜெனரல் ஆர்க்டேல் வில்சனால் தீர்மானிக்க முடியவில்லை.
அவர்கள் தப்பிக்க முயற்சிக்கும் முன் அவர்களை காவலில் வைக்கவேண்டும் என்று அவர் நினைத்தார்.
இந்த இளவரசர்களில் கிளர்ச்சிப் படையின் தலைவரான மிர்ஸா முகல், மிர்ஸா கிஸ்ர் சுல்தான் மற்றும் மிர்ஸா முகலின் மகன் மிர்சா அபு பக்கர் ஆகியோர் அடங்குவர்.
ஜெனரல் வில்சனின் ஒப்புதலுடனும், லெப்டினன்ட் மெக்டோவால் உதவியுடனும் 100 வீரர்களைக் கொண்ட ஒரு படையை ஹாட்சன் உருவாக்கினார்.
இந்த முழுக் குழுவும், குதிரைகளின் மீது ஏறி, ஹுமாயூனின் கல்லறைக்குச் சென்றது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும், பேரரசரின் மருமகனையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் முன் ஹாட்சன் அவர்களிடம் ஒரு உறுதிமொழி அளித்தார். தங்கள் பிரதிநிதியாக செயல்பட்டு ஆயுதங்களைக் கைவிடுமாறு இளவரசர்களை வற்புறுத்தி இணங்கச்செய்தால் அவர்களது உயிர்கள் பறிக்கப்படாது என்று உறுதியளித்தார்.
ஹாட்சனுக்கு எந்த இளவரசரையும் அடையாளம் தெரியாது என்பதால் இளவரசர்களை அடையாளம் காணும் பணியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நீண்ட முயற்சிக்குப் பிறகு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்ட இளவரசர்கள்
ஹாட்சன் கல்லறைக்கு அரை மைல் முன்பே நின்றுவிட்டார். நிபந்தனையின்றி அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற செய்தியுடன் பேரரசரின் மருமகன் மற்றும் தனது தலைமை உளவுத்துறை அதிகாரி ரஜப் அலியை இளவரசர்களிடம் அனுப்பினார்.
இளவரசர்களை ஆயுதங்களைக் கைவிடச்செய்ய தனது பிரதிநிதிகள் மிகவும் போராட வேண்டியிருந்தது என்று ஹாட்சன் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.
அரை மணி நேரம் கழித்து, இளவரசர்கள் ஹாட்சனுக்கு ஒரு செய்தியை அனுப்பி, அவர் தங்களை கொல்ல மாட்டார் என்று உறுதியளிக்கமுடியுமா என்று கேட்டார்கள்.
அத்தகைய வாக்குறுதியை வழங்க மறுத்த ஹாட்சன் நிபந்தனையின்றி சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்குப் பிறகு, இளவரசர்களை தன்னிடம் அழைத்து வருவதற்கு பத்து வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை ஹாட்சன் அனுப்பினார்.
"சிறிது நேரத்திற்குப் பிறகு மூன்று இளவரசர்களும் எருதுகளால் இழுக்கப்பட்ட ஒரு சிறிய தேரில் வெளியே வந்தனர். அவர்களின் இருபுறமும் ஐந்து வீரர்கள் நடந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பேர் கொண்ட கூட்டம் இருந்தது.
அவர்களைப் பார்த்ததும், நானும் ஹாட்சனும் எங்கள் வீரர்களை விட்டுவிட்டு, எங்கள் குதிரைகளில் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்கள் ஹாட்சன் முன் தலை குனிந்தார்கள். ஹாட்சனும் தலையைக் குனிந்து பதிலளித்து, தேர் ஓட்டுபவர்களை முன்னோக்கி நகரும்படி கேட்டுக் கொண்டார். கூட்டமும் அவரைப் பின்தொடர்ந்து வர முயன்றது.
ஆனால் ஹாட்சன் கையைக் காட்டி அவர்களைத்தடுத்தார். நான் என் வீரர்களை நோக்கி சமிக்ஞை செய்தேன். கண நேரத்தில் அவர்கள் கூட்டத்திற்கும் தேருக்கும் இடையில் நின்றுகொண்டனர்," என்று லெப்டினன்ட் மெக்டோவல் எழுதுகிறார்.
சிகரெட் புகைத்து தான் கவலைப்படவில்லை என்ற உணர்வைக் கொடுத்த ஹாட்சன்
இளவரசர்களுடன், அவர்களின் ஆயுதங்களும், பேரரசரின் யானைகள், குதிரைகள் மற்றும் வாகனங்களும் வெளியே கொண்டு வரப்பட்டன. அவை முந்தைய நாள் வெளியே கொண்டுவரப்படவில்லை.
இளவரசர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு உயிர்பிச்சை கொடுக்கப்படுமா என்று கேட்டார்கள்.
'நான் 'இல்லவே இல்லை' என்று பதிலளித்து, எனது வீரர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்களை நகரத்திற்கு அனுப்பினேன். இளவரசர்கள் சரணடைந்தவுடன், கல்லறையை ஏன் தேடக்கூடாது என்று நினைத்தேன். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 வாள்களைக் கண்டோம். இது தவிர, ஏராளமான துப்பாக்கிகள், குதிரைகள், காளைகள் மற்றும் தேர்களும் அங்கு இருந்தன. அங்கு இருப்பது இனி ஆபத்தானது என்று மெக்டொவல் கூறினார். மேலும் இரண்டு மணி நேரம் நாங்கள் அங்கேயே இருந்தோம். இதற்கிடையில், நான் சிகரெட் புகைப்பதைத் தொடர்ந்தேன். அதனால் நான் கவலைப்படவே இல்லை என்ற எண்ணத்தை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நினைத்தேன்," என்று ஹாட்சன் எழுதியுள்ளார்..
சிறிது நேரத்திற்குப் பிறகு ஹாட்சனும், மெக்டோவலும், இளவரசர்களை தங்கள் கண்காணிப்பில் நகரத்தை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்த வீரர்களை சென்றடைந்தனர்.
மூன்று இளவரசர்களையும் துப்பாக்கியால் சுட்ட ஹாட்சன்
நகரத்திற்குத் திரும்பியபோது தாங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்ததாக ஹாட்சன் மற்றும் மெக்டொவல் இருவருமே எழுதினர்.
'அவர்கள் டெல்லியில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்தபோது, ஹாட்சன் மெக்டோவலைக் கேட்டார், இந்த இளவரசர்களை என்ன செய்வது? "நாம் அவர்களை இங்கேயே கொன்றுவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று மெக்டோவல் பதிலளித்தார். ரதங்களை அங்கேயே நிறுத்துமாறு ஹாட்சன் உத்தரவிட்டார். ஹாட்சன் மூன்று இளவரசர்களையும் தேரில் இருந்து இறங்கி அவர்களின் ஆடைகளை கழற்றச் சொன்னார்.
ஆடைகளை களைந்த பின் அவர்கள் மீண்டும் தேரில் ஏற்றப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள், மோதிரங்கள், கவசங்கள், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வாள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. தேரின் இருபுறமும் ஐந்து வீரர்களை ஹாட்சன் நிறுத்தினார். பின்னர் ஹாட்சன் தனது குதிரையிலிருந்து இறங்கி ஒவ்வொரு இளவரசரையும் தனது கோல்ட் ரிவால்வரால் இரண்டு முறை சுட்டார். அவர்கள் அனைவரும் அங்கேயே இறந்தனர்," என்று அமர்பால் சிங் கூறுகிறார்,
இளவரசர்களின் உடல்கள் பொது இடத்தில் வைக்கப்பட்டன
இளவரசர்களை தேரில் இருந்து இறங்கச் சொன்னபோது, மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் இறங்கினர். ஹாட்சன் தானாக முடிவெடுத்து தங்களை கொல்லத் துணியமாட்டார் என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது.
இதற்கு அவர் ஜெனரல் வில்சனிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர்கள் கருதினர். ஒருவேளை டெல்லியின் தெருக்களில் ஆடையின்றி தங்களை அழைத்துச்சென்று அவமானப்படுத்த ஆங்கிலேயர்கள் நினைக்கிறார்களோ என்று எண்ணி அவர்கள் ஆடைகளை கழற்றினார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, பேரரசரிடம் பணிபுரிந்த திருநங்கை ஒருவர் மற்றும் பலரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் மெக்டோவல் மற்றும் அவரது குதிரை வீரர்கள் அவர்களைத் துரத்திச் சென்று கொன்றனர்.
'அதற்குள் 4 மணி ஆகிவிட்டது. இந்த இளவரசர்களின் இறந்த உடல்களை தேரில் வைத்துக்கொண்டு ஹாட்சன் நகருக்குள் நுழைந்தார். அவர்களது தலைவிதியை சாமானிய மக்கள் பார்க்கும் வகையில் ஒரு பொது இடத்த்தில் அவர்களது உடல்கள் கிடத்தப்பட்டன. அவர்களது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. அவர்களது அந்தரங்க உறுப்புகள் சிறிய துணியால் மட்டுமே மூடப்பட்டிருந்தன. அவர்களது உடல்கள் செப்டம்பர் 24-ம் தேதி வரை அங்கு வைக்கப்பட்டிருந்தன,"என்று மெக்டோவல் எழுதியுள்ளார்.
இளவரசர்களைக் கொன்றதாக ஒரு கடிதத்தில் ஒப்புக்கொண்ட ஹாட்சன்
ஹாட்சன் பின்னர் தனது சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதினார், 'இவர்கள்தான் நமது அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்றார்கள். அதற்காக அரசாங்கம் அவர்களை தண்டித்துள்ளது என்று நான் கூட்டத்திடம் சொன்னேன்.
நானே அவர்களை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு, அவர்களின் உடல்களை சாந்தினி சௌக்கில் உள்ள காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள மேடையில் வீச உத்தரவிட்டேன். நான் கொடூரமானவன் அல்ல. ஆனால் இவர்களைக் கொன்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்."
ரெவரெண்ட் ஜான் ராட்டன் தனது 'தி சாப்ளின்ஸ் நேரேடிவ் ஆஃப் தி சீஜ் ஆஃப் டெல்லி' என்ற புத்தகத்தில், 'மூத்த இளவரசரின் உடல்வாகு மிகவும் வலுவாக இருந்தது. மற்றவர் அவரை விட சற்று இளையவர். மூன்றாவது இளவரசனின் வயது இருபதுக்கும் மேல் இருக்காது,' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் உடல்களை கண்காணிக்க ஒரு காவலர் நியமிக்கப்பட்டார். அவர்களது உடல்கள் காவல்நிலையத்திற்கு வெளியே மூன்று நாட்கள் கிடந்தன. பின்னர் உடல்கள் மிகவும் மரியாதையற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டன. ஒரு வேளை மூன்று மாதங்களுக்கு முன் ஆங்கிலேயர்களின் உடல்களை அதே இடத்தில் டெல்லி மக்கள் பார்க்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் அதே நிலையில் வைத்திருந்ததால் இது ஒரு பழிவாங்கும் செயலாகவும் இருந்திருக்கக்கூடும்.
மீதமுள்ள இளவரசர்களும் பிடிபட்டனர்
செப்டம்பர் 27 அன்று, எஞ்சியிருக்கும் இளவரசர்களைப் பிடிக்க பிரிகேடியர் ஷேவர்ஸ் ஒரு குழுவுடன் அனுப்பப்பட்டார்.
அன்று ஷேவர்ஸ் மேலும் மூன்று இளவரசர்களான மிர்ஸா பக்தவர் ஷா, மிர்ஸா மெண்டு மற்றும் மிர்ஸா ஜவான் பக்த் ஆகியோரை கைது செய்தார்.
அக்டோபர் தொடக்கத்தில், பேரரசரின் மேலும் இரண்டு மகன்கள் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிப் படையை வழிநடத்தியவர்கள் மற்றும் ஆங்கிலேயர்களை படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதற்கிடையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. இந்த இளவரசர்கள் துப்பாக்கிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, 60 ரைபிள் வீரர்களும் சில கூர்க்கா வீரர்களும் சுட்ட தோட்டாக்கள் இந்த இளவரசர்களைத் தாக்கவில்லை அல்லது காயப்படுத்த மட்டுமே செய்தன.
ஆனால் இதற்குப் பிறகு ஒரு புரோவோஸ்ட் சார்ஜென்ட் இந்த இளவரசர்களை தலையில் சுட்டு அவர்களின் வாழ்க்கையை முடித்தார்.
ஆனால் கர்னல் எல் ஓம்னி தனது நாட்குறிப்பில், 'வலி மிகுந்த மரணத்தை அவர்கள் அடையவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இளவரசர்களின் உடலின் கீழ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று எழுதினார்.
அந்த நேரத்தில் அவர்கள் அழுக்கான ஆடைகளை அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மரணத்தை தைரியமாக எதிர்கொண்டனர்.
இரண்டு இளவரசர்களைக் காப்பாற்றிய சீக்கிய ராணுவ வீரர்
ஆனால் பகதூர் ஷா ஜாஃபரின் இரண்டு மகன்களான மிர்ஸா அப்துல்லா மற்றும் மிர்ஸா குவேஷ் , ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து தப்பிச்சென்றனர்.
டெல்லியின் வாய்வழிக் கதைகளை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருது எழுத்தாளர் அர்ஷ் தைமுரி தனது 'கிலா-இ-முஅல்லா கி ஜால்கியான்' என்ற புத்தகத்தில் பதிவு செய்தார். 'இரண்டு முகலாய இளவரசர்களும் ஒரு சீக்கிய ரிசல்தாரின் ( குதிரை வீரர்) கண்காணிப்பில் ஹுமாயூனின் கல்லறையில் வைக்கப்பட்டனர். அந்த ரிசல்தார் இந்த இளவரசர்கள் மீது பரிதாபப்பட்டார். நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டார். சாஹிப் எங்களை அங்கே நிற்கச் சொன்னார் என்று அவர்கள் பதிலளித்தனர்.
சீக்கியர் அவர்களை உற்று நோக்கி," அந்த ஆங்கிலேயர் திரும்பி வந்தால் அவர் நிச்சயமாக உங்களைக் கொன்றுவிடுவார். உங்களால் முடிந்த திசையில் ஓடுங்கள், மூச்சு விடுவதற்காகக்கூட எங்கும் நிற்காதீர்கள்," என்று சொல்லிவிட்டு ரிசல்தார் வேறு பக்கம் திரும்பி நின்றுகொண்டார்.
இளவரசர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடினார்கள். பின்னர், மீர் குவேஷ் எப்படியோ ஒரு ஃபக்கீர் வேடத்தில் உதய்பூரை அடைந்தார். அங்கு மகாராஜா, அவருக்கு ஆதரவளித்து, ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் சம்பளத்தில் அவரை தனது இடத்தில் வைத்திருந்தார். குவேஷைக் கண்டுபிடிக்க ஹாட்சன் கடுமையாக முயன்றார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
பகதூர் ஷா ஜாஃபரின் இரண்டாவது மகன் அப்துல்லாவும் ஆங்கிலேயர்களின் கைகளில் சிக்கவில்லை. மேலும் அவர் தனது வாழ்நாள் முழுவதையும் டோங்க் சிற்றரசில் மிகவும் வறுமையில் கழித்தார். பகதூர் ஷாவின் மற்ற மகன்கள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது நீண்ட தண்டனை அனுபவிக்க தொலைதூர சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
சில இளவரசர்கள் ஆக்ரா, கான்பூர் மற்றும் அலகாபாத் சிறைகளில் மிகவும் கடினமான சூழ்நிலையில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்களில் பெரும்பாலோர் இரண்டு ஆண்டுகளில் இறந்தனர். பகதூர் ஷா ஜாஃபரை கொல்ல மாட்டோம் என்ற வாக்குறுதியை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினர். அவர் டெல்லியிலிருந்து வெகு தொலைவில் உள்ள பர்மாவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் 1862 நவம்பர் 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு இயற்கை எய்தினார்.
நன்றி
BBC News
0 கருத்துகள்