உலகில் மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள அத்தனை விஷயங்களிலும் விலை மதிக்க முடியாத ஒன்று நேரம்!
வாழ்க்கை மிகவும் அற்புதமானது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று
சுவாரஸ்யத்தை உள்ளடக்கியது. நமக்கு வரும் ஒவ்வொரு அடுத்த விநாடியும்
சாதகமாகவும் இருக்கும் அல்லது பாதகமாகவும் அமையும். அந்தளவுக்கு மனிதனின்
வாழ்க்கை பிரதானமான ஒன்றாக இருக்கின்றது. அதில், மனிதனுக்குண்டான நேரம்
என்பது கூடுதல் இடத்தைப் பிடிக்கின்றது.
நேரத்தைப் பற்றிய அக்கறை மனிதர்களிடம் எப்பொழுதுமே இருக்க வேண்டிய
ஒன்றாகும். ஒரு மனிதனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கின்றது
என்றால், அதை அவன் எவ்வளவு பயனுள்ளதாக பயன்படுத்த நினைப்பான். அந்தப்
பொருள் அவனிடம் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான தருணமாகவே எண்ணிக்
கொள்வான்.
ஆனால், அதைவிட சிறந்த, எப்பொழுதுமே மனிதனிடம் சந்திக்கக்கூடிய நேரம்
அவனிடம் இருக்கின்றது. ஆனால், அதை அவன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை
திட்டமிடாமல் இருக்கின்றான். அதனால், அவனிடம் நேரம் சரியில்லை, நமக்குதான்
எப்பொழுதுமே கஷ்டங்கள் வருகின்றது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றான். ஒரு
மனிதன் நேரத்தை திட்டமிட்டு செலவிட கற்றுக் கொண்டு விட்டான் என்றால், அவன்
எந்தவித சூழ்நிலையையும் அசாதாரணமாக சந்திக்கக்கூடிய மனநிலைக்கு வந்து
விடுவான்.
நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எல்லோரிடமுமே
இருக்கும். மனிதர்களிடம் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, திறமைகளாக
இருந்தாலும் சரி, உடைகளாக இருந்தாலும் சரி, எல்லா விதத்திலேயும் ஒவ்வொரு
மனிதருக்கும் இடையில் சில சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஒரு
விஷயத்தில்தான் மனிதர்களுக்கு வழங்கப்பட்டத்தில் ஒரே மாதிரியாக
இருக்கின்றன. அது, நேரம்தான்.
நேரம் இல்லை என்பது வாழ்க்கையில் வரும்பட்சத்தில், ஒரு நாளைக்கு ஐம்பது மணி
நேரம் கொடுத்தாலும் போதாது என்றுதான் வார்த்தை வரும். இருக்கின்ற நேரத்தை
நல்ல முறையில் திட்டமிட்டு, தேவைக்கேற்றபடி, நேரம் நம்மை நிர்வகிக்க
முடியாமல், நேரத்தை நாம் நிர்வகித்தால், நீங்களும் ஒரு நாள் வெற்றியாளராக
பார்க்கப்படுவீர்கள்.
நேரம் போதவில்லை என்பது உண்மையா?
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில் நுட்பம், வாகன வசதிகள், பொருளாதார
மேம்பாடு என்று அடைந்து விட்டிருக்கும் சூழ்நிலையில் (எல்லாம் இருந்த
இடத்திலேயே கிடைக்கும்போது) வேலை எல்லாம் விரைவாக முடிக்கும் சூழ்நிலை
இருந்தும், குடும்பப் பெண்களிடமும் சரி, அலுவலகம் செல்லும் ஆண்களிடமும்
சரி, இளைஞர்களிடமும் சரி, எல்லோரிடமுமே ‘நேரம்’ என்பது போதாது என்ற
மனநிலைதான் இருக்கின்றது. அதனுடைய வெளிப்பாடு எல்லா வேலைகளிலும் அவசரம்,
பதற்றம், கவனமின்மை, ஞாபகமறதி போன்றவைதான் அதிகமாக இருக்கின்றது. அதுவே,
தொடரும்போது வாழ்க்கையின் ஒன்றாக மாறி விடுகின்றது.
சராசரியாக ஒரு மனிதனுக்கு 24 மணி நேரம் என்பது போதுமான ஒன்றாகும். நேரம்
போதவில்லை என்று கூறுபவர்கள், சரியாக திட்டமிடவில்லை என்றே கூறலாம். அன்றாட
வேலைகளுக்கு திட்டங்களை தீட்டிப் பாருங்கள். போதவில்லை என்ற கருத்து
பொய்யாகும்.
நேரம் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது?
ஒவ்வொரு மனிதரிடமும் நேரம் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறதென்றால்,
மனிதர்களிடம் உள்ள செயல்பாடுகளை பொறுத்தே அது வெளிப்படுகின்றது. சமூகத்தில்
ஓரங்கப்பட்டப்பட்டு, புறந்தள்ளப்பட்ட சில நபர்கள் தங்களுடைய வாழ்க்கையில்
ஜெயிக்க வேண்டும் என்ற நோக்குடன் பயணிக்கும்போது, அவர்களின் முதல் திட்டமே
நேரத்தை எவ்வாறு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றே இருக்கின்றது. அதுதான்,
அவர்களின் வெற்றியை உறுதி செய்கின்றது.
அந்த வகையில், ஆப்ரகாம் லிங்கனை நாம் நேர முக்கியத்துவத்திற்கு எடுத்துக்
கொள்ளலாம். அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் செருப்பு
தைக்கும் தொழிலாளியின் மகன். அவர் படிக்கபோகும் இடமோ இருள் சூழ்ந்த
காட்டுப்பகுதியாகும். அவருடைய நேர ஓட்டம் எப்படி இருந்தது என்று
பார்ப்போம்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சமூகப் பணியில் இறங்கும்போது ஆப்ரகாம்
லிங்கனின் வயது 19 ஆகும். அவர் அமெரிக்க மக்களின் முன்னேற்றத்திற்காக
உழைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், அவர் சிறுகச் சிறுகச் சேமித்து
வைத்திருந்த பணத்தை வைத்து முதலில் ஒரு கடிகாரம் வாங்கினார். எப்பொழுதும்
அந்தக் கடிகாரம் அவர் கைகளில்தான் இருக்கும்.
காலையில் இருந்து இரவு வரை நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை, அதில்
எதுவெல்லாம் அவசரமாக செய்ய வேண்டும், எதுவெல்லாம் தாமதமாக செய்யலாம்
என்பதையும் எழுதி வைத்துக் கொள்வார்.
ஒவ்வொரு வேலைகளும் முடிந்தவுடன் டிக் செய்து கொள்வார். முடியாத வேலைகள்
என்ன என்பதை வரிசைப்படுத்தி, அதில் எதை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை
எழுதி வைத்துக் கொண்டு, அதை முடிப்பதற்குண்டான வேலைகளில் தீவிரமாக
இருப்பார்.
அதோடு நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு, கட்டுரைகள் எழுதுதல், மக்களுக்கு
உதவி செய்தல் போன்றவற்றுக்கும் நேரத்தை ஒதுக்கி வைத்திருப்பார். அந்தந்த
செயல்பாடுகள் முடிந்தவுடன் அதனை ‘டிக்’ செய்து கொள்வார்.
இப்படி ஒரு நாளின் பணிகளை திட்டமிட்டு, அதற்கான நேரம் இவ்வளவுதான்
என்பதையும் முடிவு செய்து பயணிப்பார். இதனால், குறுகிய நேரத்தில் அதிகமான
வேலைகளையும், செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் மிக்கவராகவும் மாற முடிந்தது.
அதற்கு பெரிதும் உதவிய அந்தக் கைக்கடிகாரம், எப்பொழுதும் நேரத்தை
பார்த்தப்படியே இருப்பார். இது, ஆப்ரகாம் லிங்கனுடைய நேர நிர்வாகம்.
இன்னொரு அறிஞர் ஒருவர் அவருடைய வீட்டு வாசலில் ஒரு வாசகம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்:
அதில், 'வீட்டிற்கு வருபவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் செல்லவில்லையெனில்,
என்னுடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்' என்று. என்னவென்றால்,
நாம் ஒருவரை சந்திக்கச் சென்றுவிட்டு, நம்முடைய வேலைகள் முடிந்தவுடன்
திரும்பவில்லையெனில் அவருடைய வேலைகளுக்கு இடையூறாக இருக்கின்றோம் என்பதே
அர்த்தமாகும். அதையே சில நபர்கள் சொல்லி விடுவார்கள். சில நபர்கள் சொல்ல
தயக்கப்படுவார்கள்.
அதனால், நாம் சந்திக்கும் எந்த ஒரு நபரிடமும், நம்முடைய வேலைகள்
முடிந்தவுடன், அதனுடைய கால நேரத்தைப் பொறுத்து சென்றுவிட வேண்டும். அவருடைய
பொன்னான நேரத்தை வீணடித்து விடக்கூடாது. நேரங்களை நிர்வகிப்பதில் நாம்
பார்த்தவர்கள் உலகத்தில் அறியப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.
காலத்தின் அருமை
ஒரு வயலில் விதைக்க வேண்டிய காலம் தவறி நெல்லை விதைப்பதனால் எம்மால் அறுவடையை பெற்று கொள்ள முடியாது. அது போல இளமையில் வறுமையில் வாடி விட்டு முதுமையில் செல்வமும் செழிப்பும் கிடைப்பதுவும் பயனற்றது.
இது பசியில் வாடும் போது கிடைக்காத உணவு இறந்த பின்னர் கிடைப்பதை போன்றது. எதுவாக இருந்தாலும் அந்த காலத்தில் கிடைப்பதனால் தான் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒருவருக்கும் வெள்ளி பதக்கம் வென்றவருக்கும் ஒரு சில செக்கன்கள் தான் நேர வித்தியாசம் நேரம் மிகவும் பெறுமதியானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அவர் ஒலிம்பிக் விளையாட்டின் மூலம் சம்பாதித்த பணம் நானூறு கோடிகள்.
ஆனால் அவர் அதற்காக செலவளித்த நேரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அந்த இரண்டு நிமிடங்களில் வெற்றியாளனாக மாறுவதற்காக இருபது வருடங்கள் அவர் தனது நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உசைன் போல்ட் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
நேரத்தை சரியாக பயன்படுத்தி நமது வேலைகளை ஒழுங்குபடுத்தும் போது எந்தவித இடையூறோ, அவசரமோ இல்லாமல் சரியான நேரத்தில் அவற்றை செய்து முடிக்க முடியும்.
கிடைக்கின்ற நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்வதன் மூலமே வெற்றிப்பாதையில் சிறப்பாக பயணம் செய்ய முடியும்.
நாம் நேரத்தை எப்படி பேணுகிறோம்?
நம்முடைய வாழ்க்கையில் நேரம் என்பது முக்கியமான ஒன்றாக இல்லையெனில்,
நேரத்தை குறித்த கவலை நம்மிடம் இல்லை என்றே சொல்லலாம். அன்றாடம் நாம்
இயந்திர மனிதராக வாழ்கின்றோமா? அல்லது ஒவ்வொரு நாளுக்கும் இடையில்
வேலைப்பங்கீட்டில், அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டியவைகளை அன்றைக்கே
செய்தல், குழப்பமில்லாமல் வேலை நடைபெறுகின்றது என்றால், நீங்கள் நேரத்தை
திட்டமிட்டு செய்கின்றீர்கள் என்று சொல்லலாம்.
வழக்கம்போல் நேரம் போண போக்கில், மணியை பார்க்காமல், ஏதாவதொரு வேலையை
செய்து விட்டு போகின்றோமா அல்லது எல்லா வேலைகளையும் தலையில் தூக்கி வைத்து
விட்டு நேரம் இல்லையே என்று திணறுகின்றோமா? என்று பாருங்கள்.
இதுவெல்லாம், உங்களுடைய வாழ்வில் இருக்கின்றது என்றால், அதை இனி தொடர விரும்பாதீர்கள். நேரம் உங்களை நிர்வகித்து வந்ததை முறியடித்து, நீங்கள் நேரத்தை நிர்வகித்து பழகுங்கள்.
ஒரு நாள், வாரம், மாதம் என்று செய்ய வேண்டியவைகளை ஒரு நோட்டில் எழுதுங்கள்.
அதில், எதுவெல்லாம் முதன்மையாக செய்ய வேண்டும் என்றும், எதுவெல்லாம்
பின்னாட்களில் செய்யலாம் என்றும் திட்டம் தீட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு
வேலையும் முடிந்தவுடன், டிக் செய்து கொள்ளுங்கள். முடியாத வேலலைகள்
எதுவென்பதை எழுதிவிட்டு, அதனுடைய காரணத்தையும் ஆராயுங்கள்.
அதை வரும் காலங்களில் சரிப்படுத்துங்கள். நீங்களும் நேரத்தை
ஆளுமைப்படுத்துவதில் சிறந்தவராக மாறலாம். அதன் மூலம் ஆற்றல் மிக்கவராக
செயல்படலாம்.
0 கருத்துகள்