புதிய புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்க கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மார்கோபோலோ போன்றவர்கள் செய்ததெல்லாம் கண்டுபிடிப்புச் சுற்றுலாக்கள். யுவான் சுவாங் போன்ற யாத்ரிகர்கள் பல நாடுகளிலும் சுற்றிச் சேகரித்த செய்திகள் மிக முக்கியமான ஆவணங்களாகும். இவை சரித்திர ஆவணச் சுற்றுலாக்கள். வரலாறு பாடத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வரலாற்று சுற்றுலா அவசியமாகும்.வரலாற்று பாடத்தோடு தொடர்புடைய சுற்றுலா தலங்களை மாணவர்கள் சுற்றுலா செல்வது வரலாற்று சுற்றுலா எனப்படும்.தமிழ்நாட்டில் மாணவர்கள் வரலாற்று சுற்றுலா செல்லவேண்டிய இடங்களில் முக்கியமானதாக மண்டகப்பட்டு,தளவானூர் குடைவரைக் கோவில் இடம்பெற்றுள்ளது.
தமிழகக் கட்டடக் கலையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாக கி.பி 6 - ம் நூற்றாண்டைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில்தான் பல்லவர்கள் தமிழகம் எங்கும் முதிர்ந்த பாறைகள் இருந்த மலைகளைக் குடைந்து எழில்மிகு கோயில்களை உருவாக்கினார்கள். தொண்டை மண்டலத்தில் காணப்படும் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. இவைதவிர்த்த பிற இடங்களிலும் சில குடைவரைக் கோயில்களை பல்லவ மன்னர்கள் எழுப்பினர். அவற்றுள், 6 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு குடைவரைக் கோயில்கள் விழுப்புரத்திற்கு அருகே காணப்படுகின்றன. விழுப்புரம் - செஞ்சி சாலையில் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
பல்லவ மன்னர்களுள், முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிடத்தக்கவன். இவனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி என்று பல்வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு. `குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி' என்று போற்றப்படும் மகேந்திரவர்மன், முதலில் சமண சமயத்திலிருந்து பின்பு சைவ சமயத்தைத் தழுவியவன். இவன் உருவாக்கிய இரு குடைவரைக் கோயில்கள் விழுப்புரம் அருகே அமைந்துள்ளன.
அவற்றுள், `மண்டகப்பட்டு’ எனும் கிராமத்தில் அமைந்துள்ள, குடைவரைக் கோயிலே காலத்தால் மூத்த குடைவரை என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. அதை அங்கு காணப்படும் கல்வெட்டு உறுதி செய்கின்றது.
இந்த ஆலயம், பிரமாண்டமான கலை வேலைப்பாடுகள் ஏதுமின்றி மிக எளிமையாக பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் கோயில் என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி கருவறை அமைந்துள்ளது. ஆனால், கருவறைகளில் தற்போது விக்கிரகத் திருமேனிகள் ஏதும் இல்லை. மும்மூர்த்திகளின் திருமேனிகளை மரத்தில் செய்து வழிபட்டு இருக்கலாம்; அது காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கோயிலின் எதிர்புறத்தில் இரண்டு கம்பீரமான துவார பாலகர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த கட்டுமானமும் பல்லவர் காலச் சிற்பபாணியான, `சதுரம் - எண்கோணம்' என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன. முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்திருக்கும் இந்தக் குடைவரைக் கோயில் காண்பதற்கு மிகவும் எழிலுடன் திகழ்கிறது. சதுர வடிவம் கொண்ட நான்கு பெரிய தூண்கள் ஆலயத்திற்கு எழில் சேர்க்கின்றன. இங்குள்ள தூண் ஒன்றில் சம்ஸ்கிருத கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. அந்தக் கல்வெட்டில் கீழ்க்காணும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை ஏதும் பயன்படுத்தாமல் `லக்ஷிதாயனம்' என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் மும்மூர்த்திகளுக்கு விசித்திர சித்தனால் உருவாக்கப்பட்டது. `விசித்திர சித்தன்’ என்பது மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
இந்த மண்டகப்பட்டு கோயிலை உருவாக்கியதற்குப் பின் சிலகாலம் கழித்து, இங்கிருந்து 10 கி. மீ தொலைவில் உள்ள `தளவானூர்'எனும் கிராமத்தில் சிவனுக்கான மற்றொரு குடைவரைக் கோயிலை உருவாக்கினான் மகேந்திரவர்மன். பரந்து விரிந்த வயல்வெளிகளின் நடுவே தளவானூரில் காணப்படும் இந்தக் கோயில் மகேந்திரவர்மன் சைவ சமயத்தை தழுவியதைக் குறிக்கும் வகையில் உள்ளது. மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் காணப்படும் இந்தக் கோயிலை, வயல்வெளிகளுக்கு நடுவே காணப்படும் ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை வழியே சென்று அடையலாம். தெற்கு திசை நோக்கிய வாயிலைக் கொண்ட இந்தக் கோயிலின் அடித்தளம் மற்ற குடைவரைக் கோயில்களை ஒப்பிடுகையில் வளர்ச்சியடைந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வாயிலின் மேலே நாசிக்கூடுகள், மகரதோரணம், இருபுறத்திலும் இரண்டு துவாரபாலகர்கள் என அனைத்தும் ஒரே ஒரு பெரிய பாறையில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள தூண்கள், மாமல்லபுரத்தில் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியின் மண்டப தூண்களுக்கு முன்னோடி என்று கூறப்படுகிறது.
இந்தக் கோயிலினுள் பெரிய மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அதையொட்டி கிழக்கு திசை நோக்கிய, சதுர வடிவக் கருவறை அமைந்துள்ளது. இந்தக் கருவறையின் வாயிலில் இரு துவாரபாலகர்கள் வரவேற்க, லிங்க ரூபமாய் தரிசனம் தருகிறார் சிவபெருமான். ஆலயத்தின் வெளிப்புறத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டும் அதன் மொழிபெயர்ப்பான தமிழ்க் கல்வெட்டும் காணப்படுகின்றன.
``இந்த ஆலயத்தின் பெயர் `சத்ரு மல்லேஸ்வரர் ஆலயம்’. இந்தக் கல்வெட்டில், `ஒரு வலிமையான தண்டெடுத்து அனைத்து அரசர்களையும் எளிமையாக அடக்கி ஆட்சி புரிந்துவந்த நரேந்திர சத்துரு மன்னன் என்பவன் இந்தக் குடைவரைக் கோயிலை உருவாக்கியுள்ளான்’ என்று சொல்லப்பட்டுள்ளது. சத்ருமல்லன் என்பது முதலாம் மகேந்திரவர்மனின் இயற்பெயராகும். அவன் தன்னுடைய பெயராலேயே இந்தக் கோயிலை அமைத்துள்ளான். இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் காணப்படும் மகரதோரணம் வேறு எந்தக் குடைவரை கோயிலிலும் காணமுடியாதது. அதேபோல் இந்தக் குடைவரை கோயிலில் மேற்பகுதியில் சமணர் படுக்கையும் உள்ளது” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முனைவர். ரமேஷ்அதோடு ஆலயத்தின் வெளிப்புறத்தில் தலையற்ற நந்தியும், சிதிலமடைந்த சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. மேலும் சமணர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சூரியன் ஒளிபடாத சுனைநீர் மற்றும் படுகை அமைப்பும் இங்கு காணப்படுகிறது
0 கருத்துகள்