Ad Code

Ticker

6/recent/ticker-posts

kavithai for retired teachers in Tamil

 


அதிசயப்பிறவி ஆசிரியர்

தினமும் ஆசி கொடுக்கும்

அதிசயப் பிறவி ஆசிரியர்

அடுப்பு எரியா விட்டாலும்

அறிவூட்டும் களஞ்சியம்

பணம் பற்றாக்குறையிலும்

படிப்பு தரும் அமுதம்

விடியலில்லா வீட்டிலும்

விடியல் தரும் சூரியன்

ஏடு எடுக்கா கைகளிலும்

படிப்பு வாசம் தரும் நந்தவனம்

தாயின் அருமைக்கு பிறகு

ஆசிரியரின் அருகாமையே

அரவணைக்கும் ஆலயம்

அடித்து விட்டு பெற்றோர் முன்

நல்லாவே படிக்கிறான் எனும்

நேரம் எங்களைக் காக்கும்

காவல் தெய்வம்

கரம் பிடித்து கரைச் சேர்க்க

எழுத்தோடு என்னையும்

திருத்திய புத்தகம்

சமூக சீர்திருத்தும் பணியில்

தன்னை உருக்கி மாணவனைத்

தங்கமாக்கும் அதிசயம்

படித்தவனும் படிக்காதவனும்

சொல்லும் ஒரே மந்திரம் - அந்த

வாத்தியார் இல்லா விட்டால்

நான் இல்லை என்பதே


நவீன சரஸ்வதியே

என் பெயரை உச்சரித்து

என் இதயத்தை விரட்டி இடம் பிடித்த

முதல் நாயகி

அவள் சொல் மீறாது

பாராட்டை பெற்றிடவே

புத்தகத்தில் புதைந்தேன்

என்னால் எல்லாம் முடியுமென்பதை

என் மூளையில்

முடிச்சு போட்ட முத்தழகி

மந்த புத்தியில்

வெள்ளையடித்து வெளிச்சம் தந்திட்ட

வெள்ளி நிலா

உயிரும் மெய்யும் கற்பித்து

ஆசிரியை வடிவில் வந்திட்ட

நவீன சரஸ்வதியே என் முதல் ஆசான்



சில மனங்களால் மட்டுமே....


மனிதரை மனிதராய்  பாவிக்க முடியும்....

மனந்திறந்து பாராட்ட முடியும்...

பொறுமையாய் பிரச்சனைகளை அணுகமுடியும்....

ஆராவாரமில்லாமல் அழகாய் கற்பிக்க முடியும்........

சாதித்த ஆணவமின்றி...இயல்பாய் பயணிக்க முடியும்......

அமைதியாய் பிரச்சனைகளுக்குச் செவி கொடுக்க முடியும்.....

அழகாய் அறிவுரைச் சொல்ல முடியும்....


 அப்படி ஒரு மனத்துக்காரருக்கு விடைகொடுப்பது....

அப்படி ஒன்றும் எளிதல்ல...


 நியாபகசக்தி ஒரு அதிசயம்...

 மனிதம் நிறைந்த மனது அதிசயம்...

கற்பிக்கும் திறன் அதிசயம்....

அரவணைத்து அழைத்துச் செல்லும் திறமை அதிசயம்.......

பாராட்டும் மனது அதிசயம்.....

அதற்கு கொடும் நேரம் அதிசயம்.....

சுயநலம் நிறைந்த உலகிலே....

மற்றவர் நலம் நாடும் குணம்  அதிசயம்.....


அப்படி அதிசயங்களின் சொந்தக்காரருக்கு விடைகொடுப்பது....அப்படி ஒன்றும் எளிதல்ல...


பணி நிறைவு நாள்....

பணிக்கு மட்டுமே...

கூடவே 

பயணித்த உறவுகளுக்கு இல்லை என்றாலும்....................

விடைகொடுப்பது..

 அப்படி ஒன்றும் எளிதல்ல.....


வருகின்ற நாட்களில் ..

வாஞ்சை நிரம்பி இருக்கட்டும்....

விருப்பங்கள் எல்லாம் நிறைவேறட்டும்.....

கண்ட கனவுகள் எல்லாம் பலிக்கட்டும்....

எதிர்பார்த்த பயணத்தில் வெற்றிகள் மட்டுமே நிரம்பட்டும்....

பிரபஞ்சம் நிம்மதியை மட்டுமே வழங்கட்டும்......

நிறைய மகிழ்ச்சியோடும்...

ஆரோக்கியத்தோடும்..........

அன்போடும்.........

அழகாய் அரவணைத்துச் செல்லட்டும்.....


ஃபீனிக்ஸ் பறவையே.... 

தேசங்கள் எல்லாவற்றையும் 

சிறகுகளால் 

பறந்தே கடந்த 

பறவையே.... 

நீர் இளைப்பாற 

எத்தனிக்கிறீர்கள்.... 

நெடிய பயணமொன்றை 

முடித்துக் களைப்புற்ற 

உம்மை

ஆசுவாசப்படுத்திட 

மரக்கிளையொன்றைப் 

பற்றியமர்கிறீர்கள்.... 

இன்று இப்போது 

இதோ இத்தருணத்தில்.... 


தன்னம்பிக்கைப்

பறவையே!-நீர் 

பேராழிகளைப்

பறந்து கடந்தாலும் 

அதில் நீர் 

உதிர்த்துவிட்டுப் 

போன உமது

ஞாபக இறகுகள் 

எங்கள் நினைவுகளில் 

வண்ணங்கள் பூசி 

அழகிய ஓவியங்களை 

வரைந்துவிட்டுப் போகின்றன.... 


உம் வனங்கள் யாவற்றையும் 

விதைபோட்டு நீரூற்றி 

மண்ணிலே

வேர்பாயச்செய்து 

விருட்சங்களால் வனங்களை அலங்கரித்தவள் நீர்தானே?.... 


ஃபீனிக்ஸ் பறவையே.... 

உயர்ந்த இலட்சியம் 

கொண்டவர் நீங்கள்....

நீர்தான் 

ஆகாயக் கூட்டில் 

அக்னி முட்டைகளை 

அடைகாக்கப் 

புறப்பட்டவராயிற்றே!.... 

நீங்கள் 

அடைகாத்து ஆகாயத்தில் 

பறக்கவிட்ட 

அக்னிக் குஞ்சுகள்தானே 

நாங்கள்?.... 

ஆகாயவெளியில் 

அறியாமை இருளகற்றும் 

நட்சத்திரப் பறவைகள் 

நாங்கள்.... 


வெறும் மாணவன் என்னை 

மாண்புக்குறியவனாய் 

மாற்றிய 

மாபெரும் சாதனையாளர் 

நீங்கள்!.... 


தாய்க்கே உரிய 

அன்புள்ளம் 

தந்தைக்கே உரிய 

வழிகாட்டலும் வீரமும் 

ஒருங்கே பெற்றவர் நீங்கள்! 

ஆதலால்தான் நீரெங்கள் 

தாயுமாகி 

தந்தைக்கு நிகராகி 

உயர்ந்து நிற்கிறீர்கள் 

வானத்தையும் தாண்டிய 

எங்கள் உள்ளங்களின் 

உயரத்தையும்விட.... 


அறப்பணியாம் 

ஆசிரியப் பணியின்

சாதனை அன்னையே!.... 

பறந்து களைப்புற்ற 

உம் சிறகுகளின் 

இளைப்பாறுதலுக்குப் பின்பு 

எங்களுக்கு 

வழிகாட்டிப் பறப்பீராக.... 

நீர்.... .

பெரியதாய்ச் 

சாதித்தீர்!..... 

நலம் பல பெற்று 

நூறாண்டு தாண்டி 

வாழ்க வளமுடன் 

உம் வாழ்வில் சிறந்து 

என்று நான் 

உம்மை வாழ்த்த வயதில்லை 

ஆதலால் நீர் 

என்றென்றும் 

வாழ்வாங்கு வாழ 

இறைவனை வேண்டுகிறேன்

உமது 

மாண்புமிகு மாணவன்.... 



அலுவலக கணக்கு...

வீட்டுக் கணக்கு... அலுவலக கணக்கு...
இரண்டிலுமாய் உழன்று... உழன்று...
சரி செய்வதும்... நேர் செய்வதுமாய்...
இருந்த கணக்கில் ஒன்று முடிவடைகிறது....!!

காலம் கூட்டிய வயது கணக்கில்
அலுவலக கணக்கு தீர்வடைகிறது...
முடிவுற்ற கணக்கோடு விடைபெறுதல்கள்
பிழையற்ற கணக்காதலால் புகழாரங்கள்...!!

நாளை முதல் விடியல்கள் எல்லாம்
பறவைகளின் இனிய கீதத்துடன்
ரசிக்கலாம் புலர்காலை பொழுதினை
கதிரவனுக்கு வணக்கங்கள் கூறி...

நேரம் ஆகிவிட்டது... நேரம் ஆகிவிட்டது
அலுவலக புறப்பாடுகளின் போதான
அசரீரி எச்சரிக்கைகளில்
ஓடிய கால்கள் இனி
அலுப்பின்றி நடை பயிலலாம்...

"இந்த கோப்பினை முடிக்க வேண்டும்
அந்த வேலை பாதியில் நிற்கிறதே??"
குழப்பமான சூழ்நிலைகளுக்கும்
ஆரவாரங்களுக்கும்
இன்றோடு முற்றுப் புள்ளிகள்...

இனி வினாக்கள் இல்லா வாழ்க்கையில்
அனைத்தும் விடைகளாய்...
தெளிவான ஓடையாய்
சீரான முதிர்காலங்கள்...!!

வளத்தைப் பெருக்கிய தெய்வம்
வள்ளலாய் வழியனுப்பி வைக்கிறது
"வைத்துக் கொள் இன்னுமாய்
வருங்காலத்திற்கான கொடைகள்" ...!!

மீதமுள்ள காலத்தை
அமைதி பாலத்தில் கடக்கலாம்
ஆரவாரங்கள் அற்ற பாதைகளில் எல்லாம்
மகிழ்ச்சிப் பூக்களின் வரவேற்புகள்
பன்னீர் தெளித்து பரவசமாய்...!!

பணி ஓய்வினை மகிழ்வுடன் ஏற்று
இறைவனின் ஆசிகளுடன்
என்றென்றும் இன்புற்றிருக்க
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!!

கல்லூரி விடுதி

கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் காதலர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....

எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..

உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை

நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
கல்லூரி இறுதிநாளை
கடக்காதவரை

சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
படிப்புக்கு வந்துபோகும்
நமக்கு
இந்த கல்லூரியும்
ஒரு வேடந்தாங்கல்தான்...

சீசன் முடிந்துவிட்டது
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும்.
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...

பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
பிரிவு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...

தகப்பனிடமிருந்து பிரிந்து
தாய் வயிற்றில் உறவு கொண்டாய்
தண்ணீர் வடிவத்திலே
அங்கே- உனக்கு
உறவும் கிடைத்தது
கரு என்ற
உயர்வும் கிடைத்தது...

தாய் வயிற்றிலிருந்து பிரிந்து
தரையோடு உறவு கொண்டாய்
சிசுவின் வடிவத்திலே
அங்கே- உனக்கு
உலகோடு உறவும் கிடைத்தது
குழந்தை என்ற
உயர்வும் கிடைத்தது...

இப்படி
உன் ஆரம்பமே பிரிவில்தானே
அரங்கேறியிருக்கிறது
அப்புறம் ஏன் வருந்துகிறாய்
இப்பிரிவிற்க்காக...

சந்தோசப்படு
மூன்றாண்டுகளுக்குள்
எத்துனை நல்ல உள்ளங்களை
நட்பாக்கிக்கொண்டோம் என
சந்தோஸப்படு...

வருத்தப்படு
மூன்றாண்டாய்
இன்னும் இத்துனை
உள்ளங்களை
அறிய முடியவில்லையேவென
வருத்தப்படு...

இப்படியெல்லாம் எழுதி
எனக்கே நான்
ஆறுதல் சொன்னாலும்
என் அடிமனம் மட்டும்
அழுகையை நிறுத்த மறுத்து
அடம்பிடிக்கிறது
ஆம்
கையடிந்த பின்னாலே
கை வளை கேட்பவளாய்!
பிரிவை வெளியே
நிறுத்திவிட்டு
உறவோடு இங்கே
புலம்பிக்கொண்டிருக்கிறேன்...

விரல்போன நேரத்தில்
வீனை வாசிக்க
ஆசை வந்தவனாய்!
பிரிவு வரும் வேளையிலே
உறவுக்காக ஏங்குகிறேன்...

விடுதி நாள்
எனச்சொன்னபோது
என் விலாஎலும்புகளும்
விழாக்கோலம் பூண்டது
அதுவே நமக்கு
பிரிவுரை நாள்
என நினைக்கும்போது
நெஞ்சத்தில்
நேறிஞ்சி முள்ளல்லவா
நிமிடத்திற்கொருமுறை
மோதிச்செல்கிறது...

இரயில் சிநேகமாய்
நம் உறவு இருந்திருந்தால்
நயமோடு சொல்லியிருப்பேன்
நட்பின் அடையாளங்களை..
இங்கே நம் இதயங்கள்
சிநேகமானதால்
என்னவென்று எடுத்துரைப்பேன்...

மூன்றுநாள்
கல்யாணவீட்டு நட்பென்றால்
நட்பை நளினப்படுத்தி
பாட்டெழுதலாம்
ஆனால் மூன்றாண்டு
கல்லூரி நட்பானதால்
வெட்க்கத்தோடு
ஒப்புக்கொள்கிறேன்
நம் காதலைச் சொல்லி
கவி எழுத - எனக்குத்
தெரியவில்லையென்பதை...

என் உள்ளங்களே !
மரங்களுக்கு மரணம்
இலையுதிர்க்காலமல்ல...
உரசுவதால் அவமானம்
தங்கத்திற்கல்ல...
ஆம்...
வீழ்ச்சியுற்ற அருவிதானே
நதிகளானது...
விதை விழுந்துவிட்ட பிறகுதானே
செடிகளானது...
காய்ச்சப்பட்ட இரும்புதானே
ஈட்டியானது...
கரும்பு கசக்கப்பட்ட பிறகுதானே
வெல்லமானது...

அப்படித்தான்
நம் உறவுக்கு மரணம்
இந்த பிரிவுமல்ல...
இந்த சின்னப் பிரிவுக்குப்பின்னே
நமக்கு உயர்வும் வந்து சேரும்..
நம் உறவும் தொடர்ந்து வரும்...
என
என் வார்த்தைகளை
முடிக்கும்முன்
இன்னுமொருமுறை
உரக்க உரைத்துக்கொள்கிறேன்

மரங்களுக்கு மரணம்
இலையுதிர்க்காலமல்ல...
நம் உறவுக்கு மரணம்
இந்தப் பிரிவுமல்ல....







கருத்துரையிடுக

0 கருத்துகள்