மரங்களில் இருந்து தொடர்ந்து இலைதழைகள் மற்றும் பட்டைகள் உதிர்கின்றன, அவ்வப்போது மரத்தில் இருந்து சிறுசிறு கிளைகளும் உடைந்து விழுகின்றன. மரத்தின் அடியில் உள்ள பல்வேறு செடிகொடிகளும் அவற்றின் வாழ்நாள் முடிந்தபின் மடிந்து மண்ணில் விழுகிறது, சில மாதங்கள் கழித்து அவ்விடத்தைப் பார்த்தால் அவற்றின் பெரும்பாலானவை மட்கிப் போயிருக்கும். ஒரு சில கடினமாக குச்சிகள் மட்டுமே மட்காமல் இருக்கும்.மேற்கண்ட செயல்முறையை நாம் கவனிக்கும் போது இதில் பல கேள்விகள் பொதிந்திருக்கும். இலை தழைகளை கட்டமைக்கும் மூலப்பொருள் என்ன? மட்கு என்பது என்ன? மட்கும் செயல் எப்படி நடைபெறுகிறது? இலை தழைகள் ஏன் மட்க வேண்டும்? அவை மட்கவில்லை என்றால் என்ன நிகழும் என்பது போன்ற பல கேள்விகள் எழுவது இயல்பாகும். இதை நாம் தெரிந்து கொள்ளும் போது மூடாக்கு எப்படி மட்காக மாறுகிறது என்பதையும், உருவான மட்கை பாதுகாப்பது மூடாக்குதான் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
தாவரத்தின் கரிமப் பொருட்கள்:
பெரும்பாலான தாவர உடலங்கள் (Biomass) கரிமப்பொருட்களால் (சர்க்கரை) ஆக்கப்பட்டுள்ளது. ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் மற்றும் நீரினால் இந்த சர்க்கரை மூலக்கூறுகள் உருவாக்கப் படுகின்றது. இதில் கார்பன் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடில் இருந்தும், ஆக்சிஜன் நீரில் இருந்தும் பெறப்படுகிறது. தாவரத்தின் எந்த பாகமும் பல செல்களால் ஆன ஒரு தொகுப்பாகும். இந்த ஒவ்வொரு செல்களையும் இணைப்பது செல்சுவர் என்ற அமைப்பாகும். தாவரத்தின் மென்மையான பாகங்களா இலைதழைகள் சருகுகள் போன்ற செல்லுலோஸ் என்ற கரிமப் பொருள் மற்றம் நுண்ணூட்டங்கள் நிறைந்தது, கடினாமான பாகங்கள் செல்லுலோஸ் மற்றம் லிக்னின் என்ற கரிமப்பொருளால் ஆனதாகும்.செல்லுலோஸ் எளிதாக சிதையக்கூடியவை, எனினும் லிக்னினை எளிதாக சிதைத்துவிட முடியாது, லிக்னின்தான் தாவரங்களில் கடினமான பாகங்களுக்கு வலுவை கொடுக்ககூடியதாக இருக்கிறது. தானிய உமிகள், நெற்றுக்களின் தோல்கள், தண்டின் நார்ப்பகுதிகள், காய்ந்த கடினமான இலைகள், காம்புகள், வைக்கோல்கள், இலையின் நரம்புகள், முதிர்ந்த வேர்களின் நார் பொருட்கள், புற்கள், வேர்கள், கரும்பு சக்கை, மரச்சக்கைகள், தென்னை போன்ற இலைகள், சோளத் தட்டைகள், இளநீர் மட்டைகள், தேங்காய் ஓட்டின் நார் பொருட்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணமாகும். மரக்கட்டைகள் பெருமளவு பகுதி லிக்னினால் உருவாக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மட்கும் செயல் முதலில் மண் வாழ் உயிரினங்களில் இருந்து தொடங்குகிறது. தொடர்ந்து நுண்ணுயிர்கள் செயல்படுவதன் மூலமாகவும் சில வேதி மாற்றங்கள் நடைபெறுவதன் மூலமாகவும் மட்கு உருவாகிறது.
உயிரினங்களின் செயல்பாடு:
மண்ணில் வாழக்கூடிய உயிரினங்கள் மட்கு உருவாதலில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உயினங்கள் தாவர உயிர் கூளத்தின் (Plant Biomass) மீது நுண்ணுயிர்கள் செயல்படுவதற்கேற்ப அவற்றைத் தூளாக்குகின்றன. இதனால் தாவர உயிர்கூளத்தின் பரப்பளவு அதிகமாவதினால் நுண்ணுயிர்களின் செயல்பாடு வேகமாகிறது. இதில் கரையான்கள் மிக முக்கியமானதாகும், பெரும்பாலான உயிர்கூளம் கரையான்களால் சிதைக்கப்படுகிறது. மேலும் கரையான்கள் மற்றும் எறும்புகளின் புற்றுகள் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிப்பதினால் மண்ணில் உள்ள உயிர்கூளம் நன்கு ஈரமடைகின்றன. ஈரமடைந்த மற்றும் தூளாக்கப்பட்ட தாவரக்கழிவுகள் மண்புழுக்கள் உண்பதற்கு ஏற்பவும், நுண்ணுயிர்கள் செயல்படுவதற்கு ஏற்பவும் மாற்றப்படுகிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகள்:
மண்ணிலும் காற்றிலும் தேவையான ஈரப்பதம் இருக்கும் போது தாவரக் கழிவுகள் நன்கு ஊறிவிடுகிறது. நன்கு ஈரமான பொருளின் மீது நுண்ணுயிர்கள் செயல்படுவது மிக எளிதாகும். அப்போது தாவர செல்களை இணைக்கும் செல்லுலோஸ் மற்றம் லிக்னின் கரிமப் பொருட்கள் நுண்ணுயிர்களால் சிதைக்கப்படுகிறது. பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்லுலோசை உடைக்கின்றன. லிக்னின் கடினமான பொருள் என்பதால் அதை பூஞ்சைகளால் மட்டுமே சிதைக்க முடியும். மண்ணில் வாழும் பல்வேறு வகையான பூஞ்ஜைகள் இப்பணியை செய்கின்றன. இவ்வாறு தாவர செல்களை இணைக்கும் செல்சுவர்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளால் கரைக்கப்படுவதால் தாவர பாகங்கள் மென்மையடைந்து சிதைகிறது.நார் பொருட்களில் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பதை பொருத்து அது மட்கும் வேகமும் இருக்கும். செல்லுலோஸ் மட்டும் உள்ள பகுதிகள் வேகமாக மட்கிவிடும், லிக்னின் அதிகமாக உள்ள நார் பகுதிகள் மெதுவாக மட்கக்கூடியவை. இதன் அடிப்படையில் சில நார் பொருட்கள் ஆறு வாரங்களில் மட்கிவிடும், சிலபொருட்கள் மட்குவதற்கு ஒரு வருடம்கூட தேவைப்படும், எனினும் மெதுவாக சிதையும் பொருட்கள், விரைவாக சிதையும் பொருட்களைவிட மண்ணில் நிலையாக இருக்கக்கூடியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கரிமப் பொருட்கள் மட்கும் போது அவற்றுடன் இறந்த நுண்ணுயிர்களின் உடலங்களும் சேர்ந்து லிக்னோ புரோட்டீன்கள் உருவாகின்றன.
மட்கு மற்றும் லிக்னோ புரோட்டீன்:
மட்கு என்பது கருமையாகவும், எடை குறைவானதாகவும், எளிதாக உடைந்து துகள்களாகக் கூடியதாகவும், நல்ல நீர் பிடிப்புத் திறனுடையதாகவும் உள்ள ஒரு கரிமப் பொருள் ஆகும். ஒரு லிட்டர் கொள்ளளவுடைய தூளாக்கப்பட்ட மட்கு 400 கிராம் எடை மட்டுமே இருக்கும், இது அதன் எடையைப் போல் இரண்டு மடங்கு அளவு தண்ணீரை பிடித்துவைக்கக் கூடியதாக இருக்கும்.மட்கில் உள்ள மற்றொரு பொருளான லிக்னோ புரோட்டீன்கள் தாவரங்களுக்கு தேவையான சத்துக்களைப் பெற்றுள்ளது, இவை மண்ணில் முழுவதும் இணைந்து விடாமலும், நீரில் கரைந்து சென்று விடாமலும் பிடித்துவைக்கப் பட்டுள்ளது. சூரிய வெப்பத்தினால் லிக்னோ புரதங்கள் மற்றும் மட்கு எளிதாக சிதைந்துவிடும் என்பதால் மட்கை மூடாக்கு இட்டு பாதுகாப்பது அவசியமாகும், இந்த மூடாக்கு மீண்டும் மட்காக மாறிவிடும். மண்ணின் மொத்த எடையில் பாதியளவு கரிமப் பொருட்களான மட்கு மற்றும் லிக்னோ புரதங்கள் இருந்தால் அது சிறந்த தோட்ட மண் ஆகும். மண்ணை மூடாக்கு இட்டு பாதுகாப்போம் மண்ணை வளப்படுத்துவோம்.
நன்றி :
ஈஷா விவசாய இயக்கம்



0 கருத்துகள்