மரத்தை சுற்றி தரைப்பகுதியில்:
ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்சம் 10 அடி விட்டமுள்ள வட்ட பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும் .அந்த வட்ட பார்த்தியின் உள்பகுதியில் உள்ள கடைசி தூரத்தில் சிறிதாக குழிதோண்டி ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூளை 3 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளே போட்டு மூடி விடவும்.ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 10 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம் மரத்திலிருந்து ஐந்தடி அல்லது 4 அடி தொலைவில் சிறிதாகத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இதனை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால், இரண்டு முறை மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரலாம்.ஒருமுறை இ.எம் கரைசல் 30 ml ஒரு முறை மீன் அமிலம் 30 ml என தேவையான தண்ணீரில் கலந்து தரைவழி தரவும்.ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் தருவதாக இருந்தால் மாதம் இருமுறை ஜீவாமிர்தம், இரு முறை மீன் அமிலம் ,இருமுறை இஎம் கரைசல் தரைவழி தரவேண்டும்.15 நாட்களுக்கு ஒருமுறை எருக்கு கரைசல் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் வீதம் மாதம் இருமுறை அல்லது வாய்ப்பு கிடைத்தால் மூன்று முறை தரைவழி தரலாம்.200 லிட்டர் டிரம்மில் 180 லிட்டர் தண்ணீருடன் 20 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். அந்த கரைசல் நன்கு ஊறல் எடுத்து அழுகிய வாடை வீசும் நிலையில் அதனை கலக்கிவிட்டு ஒரு மரத்திற்கு 3 லிட்டர் வீதம் தரைவழி தரவும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 10 மில்லி அல்லது 10 கிராம் அளவுள்ள சூடோமோனாஸ் என்ற பூஞ்சாணக் கொல்லியை போதுமான தண்ணீரில் பாசன நீராக கலந்து மரத்தை சுற்றி ஊற்றி விடவும்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு தாக்கத்தை குறைக்க வல்ல ஆமணக்கு பொறியை ஒரு ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். ஒரு வயதுள்ள மா தென்னை மரங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் மட்டுமே தண்ணீர் தரவும் அதற்குமேல் உள்ள மரங்களுக்கு அதிகபட்சம் செம்மண் நிலங்களாக இருந்தால் 60 லிட்டர் தண்ணீரும் களிமண்ணாக இருந்தால் 40 லிட்டர் தண்ணீரும் தரலாம் .அடுத்த முறை நீர் பாய்ச்சும்போது ஏற்கனவே கொடுத்த நீர் அல்லது பாசன ஈரம் தீர்ந்து விட்டதை உறுதிப்படுத்திய பின்பு மீண்டும் பாசனம் செய்யவும்.
மரத்தின்மேல்:
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெட்டு முடிந்ததற்கு பின்பு ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் திரவத்தை 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து மட்டைகள், குருத்து மற்றும் பாலை உள்ள மரத்தின் மேல் பகுதியில் தெளித்து விடவும்.குறைந்த பட்சம் மூன்று லிட்டர் எருக்கு கரைசலை இந்தப் பகுதியில் தெளித்து விடலாம்.ஒரு மரத்திற்கு இரண்டு கிலோ வேப்பம் புண்ணாக்கு தூளை மட்டைகளின் உள்பகுதியில் பிரித்து கொட்டி விடவும்.காய்த்துக் கொண்டிருக்கும் மரம் என்றால் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ கல் உப்புடன் 100 கிராம் மஞ்சள் தூள் கலந்த கலவையை3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டைகளின் உள்பகுதியில் கொட்டி விடலாம்.வருடம் ஒரு முறையாவது அல்லது இரண்டு முறை மரத்தை பழுதுபார்த்து கசடுகளை நீக்க வேண்டும்.அதிக கருப்பு காண்டாமிருக வண்டு அல்லது சிவப்பு கூன்வண்டு தாக்கமுள்ள பகுதிகளில் ஒரு மரத்திற்கு 10 மில்லி மெட்டாரைசியம் 10 மில்லி சூடோமோனாஸ் திரவத்தை 3 லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்தின் குழிகளில் ஊற்றி விடலாம்.
0 கருத்துகள்